9 May 2014

இனவாத வலையும் சிந்திக்க வேண்டிய இலங்கை முஸ்லிம்களும்.

இனவாதம், மதவாதம் போன்ற சொற்கள் இலங்கைக்கு முற்றுப்பெறாத தொடர் கதையாகத்தான் தொடர்கின்றன. பல ஆண்டு இனவாத யுத்தம் முடிவுக்கு வந்த பிறகு சமாதானப் பூங்காவாக திகழவேண்டிய இலங்கை பூமி மீண்டுமொருமுறை பழைய நிகழ்வுகளை மீட்டிப்பார்க்க வேண்டிய ஒரு சந்தர்ப்பம் ஏற்படுமோ என்ற யதார்தமான கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது. அப்படி எழுவதற்கான ஆறம்ப இனவாத தாக்குதல்கள் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றமையை ஊடகங்கள் வாயிலாக பார்த்தும் கேட்டும் வருகிறோம். இனவாத காவிகள் அவர்களுடைய இனத்துவேச காய்களை மிக சாதூர்யமாக நகர்தி வருகின்றனர். நகர்வுகள் நாளுக்கு நாள் தீவரப்போக்கை அடைவதையும் கண்டு வருகிறோம்.


பள்ளிகளை உடைத்தல், பள்ளிகள் கட்டுவதை தடுத்தல், மாடு அறுப்பதை தடை செய்தல், ஹலாலை தடை செய்தல், இஸ்லாமிய ஆடை கலாச்சரத்தை கலைந்தெடுத்தல், பாங்கு சொல்வதை தடுத்தல், மார்க்கப் பிரச்சாரங்களை முடுக்குதல், முஸ்லிம்களின் வியாபாரங்களை முடுக்குதல், அவர்களின் பூர்வீகத்தை கேள்விக்குறியாக்கல், இஸ்லாத்தையும் இஸ்லாமிய சரிஆ சட்டங்களையும் கேலி செய்தல், அவற்றை இல்லாதொழித்தல், முஸ்லிம்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தல், போன்ற தமது குறிக்கோள்களை இனத்துவேச காவிகள் தமது தாரகமந்திரமாகக் கொண்டு இயங்கி வருவதை அவர்களுடைய ஒவ்வொரு சமீபத்திய நிகழ்வுகளும் பறைசாற்றி நிற்கின்றன. அவர்கள் இக்குறிக்கோள்களின் மூன்றின் ஒரு பங்கை பக்காவாக பூர்த்தி செய்து இருக்கிறார்கள் என்று சொன்னாலும் மிகை எதுவுமில்லை. அரச சார்புச் சமிஞ்சைகளும் அவர்களின் ஆணித்தரமான ஸ்திரத்தன்மைக்கு உறுதியான உறமூட்டுகிறது என்றும் சொல்லலாம்.

இவ்வாறு இலங்கையில் சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இனரீதியான நெருக்கடியை யாருமே சற்றும் கண்டு கொள்ளாத துரதிஸ்டம் சூழ்ந்து இருப்பதுதான் வியப்பிலும் வியப்பு. முஸ்லிம்களை பிரதிநிதுத்துவப் படுத்தி இருக்கும் நமது முஸ்லிம் அமைச்சர்கள் தமது கதிரைகளை பூர்த்தி செய்திருக்கிறார்களே தவிர முஸ்லிம்களின் நெருக்கடியை பூர்த்தி செய்யவில்லை.  தேர்தல் காலங்களில் மட்டும் ஓட்டு வங்கியை லாபகமாக நிரப்புவதற்கு ”நாங்கள்தான் சமூகக் காவலர்கள்” ”சமூகத்தை காக்கும் வீரர்கள்” என்றெல்லாம் மேடை தோறும் வீர வசனம் பேசியவர்கள், தேர்தல் முடிந்த அடுத்த கனமே தமது சொகுசு வாகனங்களில் புளுதி பரக்க அடையாளம் தெரியாமல் காணமல் போகின்ற அரசியல் தலைவர்களையே பார்க்கிறோம். அடுத்து முஸ்லிம்களின் மார்க்க விடயங்களை அணுகுவதற்காக உலமாக்களை கொண்ட உலமா சபை மார்கம் பேசுகின்றோம் எனும் தோரணையில் ”வெட்டவருபவர்களுக்கு வாளை கொடுத்து விட்டு நோன்பு பிடியுங்கள்” என்று சொல்லும் அளவுக்கு மார்க்க லட்சணத்தை கண்டுதான் வருகிறோம். இதே அவர்களுடைய சொந்த வாழ்கையில் ஒரு நெருக்கடிக்கு முகம் கொடுக்கின்ற சந்தர்ப்பங்களில், நோன்பு பிடித்து ”ஸபூரை” மேற்கொள்வார்களா? என்றால் விதிவிலக்காக கூட யாருமே தேர மாட்டார்கள் என்பதுதான் உண்மை. ”பொறுமை” என்பது நிச்சயம் ஒவ்வொருவரிடத்திலும் இருக்க வேண்டும். அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். என்ற அல்லாஹ்வின் அற்புத வர்த்தையே போதும் பொறுமையின் அவசியத்தை உணர்வதற்கு. ஆனாலும் பொறுமை என்பது விட்டுக்கொடுப்பது அல்ல. அட்டூளியத்திற்கு எதிராக அடிபணிவது அல்ல. நாம் நமது கடமையை சரிவர செய்து விட்டு, நாம் நமது போராட்டத்தை இஸ்லாம் வரையறுத்த அடிப்படையில் நிறைவேற்றிவிட்டு, அல்லாஹ் எமது இந்த முயற்சியின் மூலம் எங்களுக்கு வெற்றியைத் தறுவான் என்ற எதிர்பார்ப்போடு பொறுமையை கடைப்பிடிப்பதுதான் பொறுமையின் ஆழ்ந்த அர்த்தம். உலமா சபையோ தமது இயலாமையாலும், அச்சத்தாலும் ”பொறுமை” என்ற ஆயுதத்தைக் கொண்டு மக்களை கோழைகளாகவும், இனவாதிகளுக்கு அடிபணிந்தவர்களாகவும் மாற்றுகின்ற ஒரு மார்க்க துரோக வேலையை மார்கம் என்ற பெயரில் செய்துகொண்டிருக்கிறார்கள். இவ்வாறானவர்களின் சமூகப் பங்கு இவ்வாறு இருக்க, ஆங்காங்கே விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் தமது பங்கிற்கு எதிர்ப்பை காட்டினாலும் அதிகமானவர்கள் கூலிக்கு மாறடிக்கும் நிலைமையே அவதானித்துக் கொண்டிருக்கிறோம். முழு பூசணிக்காயையும் சோற்றில் மறைக்கின்ற அவல வேலையை அறவே குற்ற உணர்வின்றி சற்றுமே பொறுப்பில்லாமல் அசட்டை போக்கில் நடந்துகொள்கிறார்கள். எந்தளவிற்கு என்றால் பாரளுமன்றத்தில் ஒரு முஸ்லிம் அமைச்சர் தனது உரையில் ”இலங்கையில் இது வரைக்கும் எந்தவொரு பள்ளியும் உடைக்கப்படவில்லை” என்று வாய் கூசாமல் வாய் திறக்கிறார் என்றால் மேற் சொன்ன உதாரணம் எந்தளவிற்கு அவர்கள் விடயத்தில் பெருந்துகின்றது என்பதை சற்று சிந்தியுங்கள். தமது கதிரைகளையும், கௌரவங்களையும், அற்ப உலக அரசியல் இலாபங்களையும் தக்க வைத்துக்கொள்வதற்கு எப்பேர்பட்ட சமூக துரோக வேலைகளையும் செய்யத் துணிகின்ற நாதியற்ற இந்த சமூகத் தலைமைகளால் நமது சமூகம் வெட்கித் தலை குணிகிறது. 

இலங்கை அரசியல் சாசனத்தில் அச்சுப்பிசகாமல் எழுதப்பட்டுள்ள சிறுபான்மையினரின் வாழ்வுரிமை, கறுத்துரிமை, மதவுரிமை நமது பூர்வீகம் அனைத்தையும் வெறுமனே காவிகளின் அசட்டு மிரட்டல்களுக்காக அப்படியே தாரைவார்கின்ற சமூகமாக இருப்தை உண்மையான சமூக அக்கரை கொண்ட யாருதான் சகித்துக்கொள்ள முடியும்? இவற்றை முளையிலே கிள்ளி எறியவில்லை என்றால், இன்னுமொரு மியன்மார், இன்னுமொரு குஜராத் இவ்விலங்கை மண்ணிலும் இனச்சுத்திகரிப்பு அராஜகம் விஸ்வரூபம் எடுப்பதில் எல்முனையளவும் சந்தேகமில்லை.  சமூக உணரவுள்ள ஒவ்வொருவரும் இவற்றை ஒரு போதும் கண்டும் காணமல் இருக்க முடியாது. இவைகள் வெறும் நமது சமூகத்திற்கு மட்டும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இனவாத போக்கு அல்ல. மாற்றமாக நாம் நமது உள்ளத்தில் கொள்கையாகச் சுமந்துள்ள இஸ்லாம் மார்கத்திகு எதிரான ஒரு விரோதப் போக்கு என்பதையும் நாம் மனதில் ஆழ பதிய வைத்துக்கொள்ள வேண்டும். 

ஆகவே இதை ஒழிப்பதற்கு நாம் எல்லோரும் ஆயுதம் தூக்கி போரட வேண்டும் என்பதல்ல. அல்லது குழுக்கள் ஆறம்டபித்து இரகசிய தாக்குதல்கள் நடத்துவதல்ல. இஸ்லாம் அப்படி கற்றுத்தரவுமில்லை. ஆயுதம் தூக்குவதற்கு என்று சில வழிமுறைகளும், நிபந்தனைகளும் இரக்கின்றன. அவைகள் இலங்கையிலுள்ள நமக்கு ஒரு போதும் பொருந்தாது. எனவே எமக்குள்ள கடைமையும், பொறுப்பும் இலங்கை சட்டத்திற்கு உட்பட்டு அகிம்சை வழியில் போராட வேண்டும். இலங்கை அரசியல் சாசனச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள உரிமைகளை கொண்டு அற வழியில் போராட வேண்டும். அரசியல் தலைவர்களையோ, சமூகத் தலைவர்களையோ நம்பி அவரகளின் பின்னால் அணிவகுப்பதில் எந்தப் பயனுமில்லை என்ற அனுபவ ரீதியான பாடத்தை படித்த பிறகும், நமக்கென்று நாம் அறிவுரீதியான ஒரு பொறிமுறையை வகுத்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளோம். இவற்றை நாம் சரியான முறையில் உள்ளத்தில் பதிந்து செயலாற்ற தவறும் பட்சத்தில் எங்களை விட ஒரு துர்பாக்கியமான ஒரு சமூகம் யாருமே இருக்க முடியாது. 

எது எப்படியிருந்தாலும் பொதுமக்களாகிய நாம் இவ்வாறான சூடிழ்நிலைகளில் எப்படி செயல்பட வேண்டும்? எப்படி எங்களால் சட்டத்தை கொண்டு போரட முடியும்? சட்டம் அறிந்த தலைவர்கள் பின்வாங்குகின்ற பொழுது சட்டமறியாத நாங்கள் எப்படி முன்னோக்குவது? போன்ற கேள்விகள் இதை வாசிக்கின்ற ஒவ்வொருவரின் உள்ளங்களில் ஒரு மூலையில் தலம்புவது நியாயம். உண்மையில் சட்டமறியாத, சட்டம் பற்றிய தேடலில் அல்லது ஆய்வில் சக்தி பெறாத யாருமே நம்சமூகத்தில் இல்லையென்றுறிருக்குமானால் இவ்வாறானகேள்விகள் எழுவதில் யதார்தம் உண்டு. ஆனால் இன்று ஒன்றுக்கு ஒன்பது பேர் இவ்வினத்துவேச காவிகளின் வரட்டு வாதங்களுக்கு சட்டத்திலிருந்தே தக்க பதில்களை அல்லி வீசக்கூடிய அறிஞர்களும், புத்தி ஜீவிகளும் மக்கள் மத்தியிலே இருந்து கொண்டிருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்! ஏனென்றால் நபி (ஸல்) அவர்களின் ஒரு முன்னறிவிப்பு இதற்கு வெகுவாக வலுசேர்க்கிறது. ”எனது உம்மத்தில் கியாமத் நாள் வரை சத்தியத்தில் ஒரு சிறு  கூட்டம் வெளிப்படையாக இருந்து கொண்டே இருப்பார்கள்.” என்ற முன்னறிவிப்பு அசத்தியத்திற்கு எதிராக சத்தியவான்கள் இருப்பார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது. எனவே வெறுமனே அடையாலப்படுத்தப்பட்ட தலைவர்கள் சோபிக்காத நேரத்தில் சிலர் அறிமுகமில்லாமலே தமது பொறுப்பை உணர்ந்து சமூகத்திற்காக குரல் கொடுக்க முன்வருபவர்கள் அல்லாஹ்வின் கிருபையால் இருந்து கொண்டிருக்கிறார்கள் ஏன் இனிமேலும் இருப்பார்கள். எனவே பொது மக்களாகிய எங்களுடைய பொறுப்பு அவர்களின் அறிவபூர்வமான வழிநடத்தல்களில் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து அவர்களுடன் கைகோர்த்து ஒரணியில் இருந்து ஒவ்வொரு காத்திரமான முன்னகர்வுகளிலும் பங்கு கொள்ள வேண்டும். இப்படியான ஒரு பொறிமுறை வகுக்கப்பட்டு அவற்றைக் கொண்டு செயலாற்றுவமையானால் வேரற்ற மரங்கள் போல் இனவாத விசமிகள் வீழ்ந்து கிடப்பார்கள். இன்ஷா அல்லாஹ் ! இலங்கையில் ஒருபோதும் அவர்களால் எழும்ப எத்தணிக்கவே முடியாது. இனவாத வலையில் இனத்துவேச வாதிகளே சிக்சித் தவிக்கின்ற காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு எண்ணம் வைக்கிறேன். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன். 

MK YASIR


No comments:

Post a Comment