கடந்த 15.05.2015 அன்று “இலங்கை சூழலில் காபிர்கள் என்றழைக்கலாமா?" என்ற தலைப்பில் ஒரு ஆக்கம் விடிவெள்ளியில் பிரசுரமாகியிருந்தது. கட்டுரையாளர் இலங்கையின் கலப்பு இனச் சூழலில் முஸ்லிம் அல்லாதோரைக் ‘காபிர்கள்’ என்று அழைப்பது ஏற்புடையதல்ல என்று, சில காரணங்களை தொகுத்து ஆக்கத்தை முழுமைப்படுத்தியிருந்தார். கட்டுரையாளரின் குறித்த காஃபிர் தொடர்பிலான கருத்தியல் பல கோணங்களில் பிழையானவை என்பதை தெளிவுபடுத்துவதே இவ்வாக்கத்தின் நோக்கம்.
ஆரம்பமாக கட்டுரையாளர் தனது கருத்தியலை நியாயப்படுத்த திருமறைக் குர்ஆனின் காபிர் பிரயோகத்தை தனது வாதமாக முன்வைத்திருந்தார். அன்றைய அரபிகளுக்கு மத்தியில் அல் குர்ஆனின் போதனைகள் அவர்களுடைய மொழியிலே இறக்கப்படும் போது அதனை நன்கு புரிந்து கொண்ட பின் மனமுரண்டாக மறுத்தமையினாலேயே அவர்களை காபிர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். இலங்கைச் சூழலில் இருக்கும் மாற்றுமதத்தினவர்கள் அல் குர்ஆனை நன்கு புரிந்து மனமுரண்டாக மறுக்கவில்லை. எனவே இவர்களை காபிர்கள் என்று சொல்ல முடியாது; என்பதுவே அவரின் ஆரம்ப அடிப்படை வாதமாக இருந்தது.
மேற்படியான அவரின் வாத நோக்கு பல கோணங்களில் முரணானது. அடிப்படையாக திருமறைக் குர்ஆன் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்குமே அருளப்பட்டுள்ளது. அல் குர்ஆன் பொதுவாக ஒன்றை விழிக்குமாக இருந்தால் அப்பொதுப்பண்பாட்டை ஒத்த ஒட்டுமொத்த சமூகத்தையும் நோக்கியே அது குறிக்கும். “ஈமான் கொண்டவர்களே!" என்று அல்லாஹ் விழிக்கிறான் என்றால் ஈமான் கொண்டிருந்த அன்றிருந்த சஹாபாக்களை நோக்கிய மட்டுமானதல்ல; மாற்றமாக இவ்வுலகில் இருக்கின்ற, இனி இருக்கப்போகின்ற அத்துனை ஈமான் கொண்டவர்களையுமே குறிக்கும். அதே போன்று காஃபிர்கள் என்று அல்லாஹ் பொதுப்படையாக சொல்வதை நபிகளார் கால ( இறை நிராகரிப்பு) அரபுகளுக்கு மாத்திரம் பொருந்துவதாக அடையாளப்படுத்துவது தெளிவான முரண் நகையாகும்; மட்டுமல்லாமல் முக்காலத்தையும் அறிந்த வல்லோன் அல்லாஹ் இன்றைய இலங்கை சூழலை அறியாதவனாகவே பொதுப்படையாக ‘காஃபிர்கள்’ என்று சொல்லியிருக்கிறான் என்ற மாகாபாதக கருத்தும் கட்டுரையாளரின் நிலைப்பாட்டில் மறைமுகமாக ஒழிந்து நிற்கிறது என்பதையும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
அடுத்து இவ்வாதம் இன்னொரு வகையில் மிக மிக வழுவற்றதாகும். ஒரு இஸ்லாமியனுக்கும் இஸ்லாம் அல்லாத வேற்றுமதத்தை பின்பற்றுபவனுக்கும் அடிப்படையிலே பிரதான வித்தியாசம் இறை கோட்பாடே. இதற்கு பிற்பாடே மற்ற மற்ற இதர விடயங்களை நோக்க முடியும். இஸ்லாத்தின் உன்னதமான, அறிவியல்பூர்வமான இறைக்கோட்பாட்டை அல் குர்ஆனின் முழுமையான புரிதலின்றியே அல்லது யாருமே எத்திவைக்கப்படாமலேயே சுயமான பகுத்தறிவுச் சிந்தனையைக் கொண்டு மிக இலகுவாக பகுத்து அறிந்து புரிந்து கொள்ள முடியும். அதனால்தான் எல்லாம் வல்ல இறைவன் மற்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் வழங்கிடாத பகுத்தறிவு எனும் ஆறாவது அறிவை மனித இனத்திற்கு மாத்திரம் சிறப்பம்சமாக வழங்கியிருக்கிறான்.
இஸ்லாம் கூறும் ஓறிரைக் கோட்பாட்டை யாருமே சொல்லாவிட்டாலும் மனிதனின் பகுத்தறிவுச் சிந்தனை, இவ்வானம், பூமி, இதற்கு அப்பால் காணப்படுகின்ற அண்ட சராசரங்கள் அனைத்தையும் சிந்தனையோடு பார்த்து இவற்றையெல்லாம் படைத்துப் பரிபாலித்து இயக்குகின்ற ஒரு அவரிவிதமான சக்தி இருக்கிறது என்பதை சஞ்சலமின்றி ஏற்றுக்கொள்ளும். மேலும் உலகில் மனிதர்களால் கடவுள்களாக கருதப்பட்டு வணங்கிக் கொண்டிருக்கின்ற தெய்வங்களுக்கு அற்ப மனிதனால் கூட ஆற்றக்கூடிய அற்பத்தனமான சிறு காரியங்களையும் தாமாக செய்ய முடியாது என்பதையும் பகுத்தறிவு ஐயம் தெறிபட உணர்த்தும்.
அவர்களுடைய தெய்வங்களாக சித்தரிக்கப்பட்டு வணங்கப்படுகின்ற சிலைகளுக்கு அருகாமையில் ஒரு நாய் சிறுநீர் கழித்து விடுகிறது. அந்த நாயை விரட்டி விட்டு சிறுநீரையும் சுத்தப்படுத்தி விட்டு அச்சிலையை வணங்குகிறான். சிலை எதுவுமே செய்யாது என்று பகுத்தறிவே இல்லாத ஐந்தறிவு நாய் புரிந்த அளவு கூட, பகுத்தறிவு எனும் சிறப்பு கிரீடம் கொடுக்கப்பட்ட மனிதன் சிலையிடம் சென்று தனது தேவையை முறையிடுகிறான் என்றால் இதைப் புரிய அல் குர்ஆனின் மொத்த வசனங்களும் முழுமையாக புரியப்படல் வேண்டும் என கருத்துரைப்பது இறைக்கோட்பாட்டு வாசிப்பின் அதீத வறுமை நிலையையே எடுத்துக்காட்டுகிறது. இதைவிட பகுத்தறிவை அடகுவைத்து, சிலைகளை கடவுள்களாக எடுத்துக்கொள்ளும் மனிதர்களை காபிர்கள் என்று சொல்வதில் எல்லின் முனையளவும் சந்தேகமில்லை.
இன்னும் மனிதப் பகுத்தறிவு இஸ்லாத்தின் கடவுள் கோட்பாட்டை இயல்பாகவே புரிந்து கொள்ள முடியும் என்பதற்கு ஓர் உதாரணத்தைக் கூறலாம். தூரமான ஒரு பிரதேசத்திலிருந்து புகை பொங்கி மேலெழுந்து கொண்டே இருக்கிறது. புகையை பார்த்து அப்புகையை கிளப்பிவிடக்கூடிய பாரிய நெருப்புச் சுவாலை அவ்விடத்தில் பற்றி எறிந்து கொண்டிருக்கிறது என்ற முடிவை நெறுப்பைக் கண்களால் காணமலேயே பகுத்தறிவு முடிவை எடுத்துவிடும். அதே போன்றுதான் இஸ்லாத்தின் இறைகோட்பாட்டைப் புரிந்து கொள்ள முழுமையான எந்தப் போதனையும் அவசியமில்லை. குறைந்தபட்சம் தன்னோடு ஒட்டியுள்ள உடலமைப்பை பகுத்தறிவுடன் சிந்தித்தாலே போதும், அடக்கி ஆழக்கூடிய மிகப்பிரமாண்டமான சக்தியைக் கொண்ட ஒருவன் இப்பிரபஞ்ஞத்தை இயக்கிக் கொண்டிருக்கிறான் என்ற இஸ்லாத்தின் இறைக் கோட்பாடு தெட்டத்தெளிவாக பளிச்சிடும்.
எனவேதான் அல்லாஹ் தனது அருள்மறையில் பல்வேறு இடங்களில் தனது அருள்களின் வல்லமையை பறைசாற்றிவிட்டு ‘சிந்திக்கும் மக்களுக்கு இதில் ஏராளமான சான்றுகள் இருக்கின்றன’ ‘நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?’ ‘அல்லாஹ்வை அன்றி மற்ற தெய்வங்களை அழைக்கிரீர்களே! அவைகள் தமக்கு தாமே நன்மையோ, தீமையோ செய்ய எந்த வலிமையும் அற்றது.’என்று மனித பகுத்தறிவுச் சிந்தனையை தூண்டி இஸ்லாத்தின் இறைக்கோட்பாட்டிற்கு பலமான அடித்தளம் இடுகிறான்.
அடுத்து கட்டுரையாளரின் கருத்தியளின் கணிசமான பங்கு இன நல்லிணக்க அச்சுறுத்தலின் அச்ச நிலையை மையமாகக் கொண்ட காரண காரியங்களே உள்வாங்கப்பட்டிருந்தன. உண்மையில் இஸ்லாத்தில் இன நல்லிணக்கத்திற்கான வாசல் மிக மிக விசாலமானது. நமது இலங்கை நாட்டைப் போன்றே பெரும்பான்மையில் சிறுபான்மையினராகவே அன்றைய நபிகளாரின் சூழலும் காணப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் இன நல்லிணக்கதை அன்றைய முஸ்லிம் அல்லாதவர்களுடன் செவ்வனே மிகச்சிறப்பாக பூர்த்திசெய்து விட்டுச்சென்றுள்ளார்கள். இன நல்லிணக்கத்திற்கு மிகச்சிறந்த உதாரண புருஷராக நபியவர்கள் வரலாற்றில் மிளிர்ந்தார்கள். ஆனாலும் (இஸ்லாத்தை) மதத்தை பிரதிபலிக்கின்ற எந்தவொன்றையும் நல்லிணக்கம் எனும் போர்வையில் விட்டுக்கொடுக்கவில்லை. அவ்வாரே மற்ற மதத்தினரின் மத செயற்பாடுகளை தங்கள் மீது திணித்துக் கொள்ளவுமில்லை. இன நல்லிணக்கதை வெகுவாகவே ஆதரித்து வழியுறுத்திய நபியவர்கள் மத நல்லிணக்கத்தின் மெல்லிய கீரலேனும் கிஞ்சித்தும் அனுமதி அளிக்கவில்லை.
இஸ்லாத்தின் பிரதான தனித்தன்மையை (கடவுள் கோட்பாடு) அடையாளப்படுத்துவது இன நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் என்ற மனனிலைமையை உண்டாக்குவது அறியாமையும் மற்றும் ஜனநாயக மதச் சுதந்திரத்தை தாரைவார்க்கும் அனாமோதய செயலுமாகும். ஜனநாயக நாட்டில் ஒருவருடைய மதத்தை அதன் உள்ளடக்கத்தை கொண்டு செயற்படுவதற்கும், கருத்துத் திணிப்பு மற்றும் மனித உரிமை மீரல் என்பவற்றை மேற்கொள்ளாமல் பிரச்சாரம் செய்வதற்கும் இலங்கையின் அரசியல் சாசனச் சட்டம் மிகத்தெளிவாக சான்றுபகர்ந்து கொண்டிருக்கின்றது. எனவே ஒரு மதத்தின் உள்ளடக்க செயற்பாட்டை எவருக்கும் திணிக்காத பட்சத்தில் அதை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித குற்ற உணர்வும் கொள்ளத்தேவையில்லை. முஸ்லிம் அல்லாதவர்களை காஃபிர்கள் என்று வகைப்படுத்துவது இஸ்லாம் மார்க்கத்தின் உள்ளடக்கத்தில் மிகப்பிரதானமாக இருக்கும் இறைக்கோட்பாட்டின் அடிப்படையிலே தவிர அவர்களை பாகுபடுத்தி குரோதத்தையும், இன முரண்பாட்டையும் தோற்றுவிப்பதற்காக வேண்டியல்ல என்பதை ஆழமாக புரியக்கடமைப்பட்டுள்ளோம்.
அடுத்து மிக முக்கியமாக நாம் சிந்திக்கக் வேண்டியது, “காஃபிர்" என்ற அரபுப் பதத்தின் பொருள் ‘மறுப்போர்’ அல்லது ‘நிராகரிப்போர்’ என்பதேயாகும். இஸ்லாம் சொல்லக்கூடிய கடவுள் கொள்கையை மறுப்பதனால் அவர்களை அவ்வாறு அழைப்பது ஒன்றும் அவர்களை இழிவுபடுத்திய அல்லது அவர்களை இரண்டாம் தரப்பினராக கருதுவதாக அமையவே அமையாது. எந்தவொரு கோட்பாடாக இருந்தாலும் அக்கோட்பாட்டின் சந்தேகத்திற்கு அப்பாற்றப்பட்ட உறுதித்தன்மையை மிக பலமாக நிறுவுவதற்கு அக்கோட்பாட்டின் முரண்பாட்டாளர்களை குறிப்பிட்டவொரு அடைமொழியைக் கொண்டு வகைப்படுத்தி அழைப்பது உலக வரலாற்றில் அனைத்து கொள்கை கோட்பாட்டாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு கையாண்ட வழிமுறையே. இவ்வழிமுறை கட்டுரையாளரின் பார்வையில் துவேஷத்தையும், குரோதத்தையும், முறுகலையும் தோற்றுவிக்குமாக இருந்தால் உலக வரலாற்றில் தோன்றிய எந்தவொரு கொள்கை கோட்பாட்டு பரப்புரை ஆவணங்களும் இத்தகைய அர்த்தப்புஷ்டியற்ற விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவைகளாகவே இருந்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
இன்னும் கட்டுரையாளரின் வாதம் நிலைத்து நிலைபெறாத வகையில் ஆதரபூர்வமான வரலாற்று சான்றுகளும் எடுத்தியம்பிக் கொண்டிருக்கின்றன.
நபி (ஸல்) அவர்களின் பெற்றோர்களான அப்துல்லாஹ், ஆமினா ஆகிய இருவரும் எத்திவைப்பதற்கு தூதுவர்களும், போதனைக்காக வேதங்களும் இருந்திராத காலத்திலே மரணித்தவர்களாவர். அவர்களுக்காக நபியவர்கள் அல்லாஹ்விடத்தில் பிரார்திக்க முற்பட்ட போது அல்லாஹ், அவர்களை `இறைமறுப்பாளர்கள்` என்று நபியவர்களின் பிரார்த்தனையை மறுத்து விடுகிறான். ஆக நிர்பந்த சூழலொன்றைத் தவிர எப்படிப்பட்ட சூழழிலும் அல்லாஹ்விற்கு இணைவைக்கின்றவர்களை காஃபிர்கள் என்று சொல்வதற்கு மேற்சொன்ன வரலாற்றுச் சான்றைக் கொண்டு இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.
எனவே இஸ்லாத்தின் இறைக்கோட்பாட்டிற்கு பகுத்தறிவை அடகுவைத்து தெட்டத்தெளிவாக முரண்படுவதனாலும், உலகியல் நியாயங்களின் அடிப்படையில் இன நல்லிணக்கத்திற்கு எவ்விதத்திலும் குந்தகம் எற்பாடது என்ற காரணத்தினாலும் இலங்கைச் சூழலிலும் முஸ்லிம் அல்லாத, அல்லாஹ்விற்கு இணைவைப்பவர்களை காஃபிர்கள் என்றழைப்பது ஏகமனதாய் ஏற்கத்தக்கது.

No comments:
Post a Comment