11 Sept 2015

ஹெம்மாத்தகமை சம்பவம் ஓர் அலசல்

(06.09.2015) ஹெம்மாத்தகமையில் SLTJ யினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாற்று மத அன்பர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியில், இடை நடுவில் பொதுபல சேனாவின் உறுப்பினர்கள் தலையிட்டு நிகழ்ச்சியை நடத்த விடாமல் குழப்பத்தை விளைவித்தனர். இதைனையடுத்து SLTJ தலைமையகத்தினால் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் பொதுபலசேனாவுக்கு எதிராகவும், ஹெம்மாத்தகம பொலிஸின் பக்கச்சார்பான செயற்பாடு குறித்தும் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டது.

இச்சம்பவத்தின் பிற்பாடு பலரும் பலவிதமான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டிருந்தனர். அனைத்துக் கருத்துக்களையும் பகுப்பாய்ந்து அலசுகின்ற போது இரண்டு நிலைகளையே அவதானிக்க முடிகிறது.


1. ஜனநாயக இலங்கை நாட்டில் ஒரு குழு ஜனநாயகத்தை துஷ்பிரயோகம் செய்து அத்துமீறியமையினால், இச்சம்பவத்தில் SLTJ சட்டவழியில் சென்று முறைப்பாடு செய்தமை சரியானதே!

2. தற்போதைய முஸ்லிம்களுக்கு சாதகமான சூழ்நிலையில் SLTJ இவ்வாறான ஒரு முடிவொன்றை எடுத்தமை ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களுக்கும் ஏற்படுத்தப்பட்ட துரோகமாகும்; இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவை.

இவ்விரு நிலைகளிலும் நடுநிலையான, மனச்சாட்சிக்கு விரோதமற்றதொரு அவதானம் செலுத்தினோமென்றால், இரண்டாவது நிலையை கிஞ்சித்தும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் ஆரம்பமாக குறித்த நிகழ்சிக்கு சட்டச்சிக்கலை கருத்திற் கொண்டு முறைப்படி முன்கூட்டியே பொலிஸ் அனுமதி பெறப்பட்டிருந்தது. மாத்திரமல்லாமல் ஏலவே இவ்வாரான நிகழ்ச்சிகள் பல பிரதேசங்களிலும் எவ்வித அசம்பாவிதங்களும், மாற்று மத அன்பர்களிடமிருந்து எவ்வித அதிருப்தியும் இன்றி இனிதே நடைபெற்றும் இருக்கின்றன. முறையாக ஜனநாயக வழி அனுமதியுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த நிகழ்ச்சியில் இடைநடுவே அவற்றுக்கு  யாராக இருந்தாலும் குந்தகம் விளைவிப்பதானது ஜனநாயகத்தை குழிதோன்றிப் புதைக்கும் கைங்காரியமேயாகும். மட்டுமன்றி நிகழ்சியில் பதில் வழங்கிக் கொண்டிருந்த சகோ. அப்துர் ராஸிக் அவர்களுக்கு கொலை அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது. இதுவும் சட்டப்படி மாபெரும் குற்றமாகும். தவிர மண்டபத்திற்கு வெளியே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கணிசமான புத்தகங்களையும் பறிமுதல் செய்தும் சென்றுள்ளனர். இப்படி கட்டுமீறி வந்த பலசேனா உறுப்பினர்களின் ஒட்டுமொத்த செயற்பாடும் மனித உரிமை மீரலே என்பதில் எள்ளின் முனையளவும் சந்தேகமில்லை.

இவ்வாறு அராஜகத்தையும், வன்முறையையும் கையிலெடுத்து, ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி, மனித உரிமை மீரல்களை காவியுடை தரித்துக் கொண்டு உரிமையோடு செய்யும் பொதுபல சேனாவை சட்ட ரீதியில் எதிர் கொண்ட SLTJ தரப்பினரை சகட்டு மேணிக்கு குற்றம் சுமத்துவது மனச்சாட்சிக்கு முற்றிலும் எதிரானதாகும்.

அநீதிக்கும், அநியாயத்திற்கும் எதிராக சட்டவழியில் போராடுவது முஸ்லிம்களுக்கு செய்யும் துரோகம் என்ற கருத்தியல் மிகவுமே அபத்தமானது. ஏன் போராடமல் அமைதி காப்பதனால் மட்டும் சேனாக்கள் அமைதியாகி விடுவார்களா? பலசேனாக்களின் தூண்டுதலில் தம்புள்ளை பள்ளி உடைப்பு முதல் அளுத்கம எறிப்புச் சம்பவம் வரை அனைத்து அராஜகங்களுக்கும் பிண்ணனியில் சட்டரீரியிலான முன்னெடுப்புதான் காரணமாக இருந்ததா? இஸ்லாமிய விரோதப்போக்கை குறிக்கோளாக, இலட்சியமாகக் கொண்டவனுக்கு அவ்விலலட்சியம் நனவாகும் வரை அவன் அதை கையிலேந்தி போராடுவானே தவிர முஸ்லிம்கள் வாய் மூடி மௌனம் காப்பதனால் மட்டும் ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால் வாய் மூடி மௌன அங்கீகாரம் கொடுப்பதனால் ஒன்று மட்டும் நிச்சயம் இஸ்லாமிய அடையாளங்களையும், ஜனநாயக மத உரிமைகளையும் அப்படியே தாரைவார்த்து கொடுக்கமுடியும். ஆக்ரோஷப்படாமல், ஆத்திரப்படாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முன்கோப முடிவுகளை எடுக்காமல் சட்டத்தை நம்பி சட்டத்தைக் கொண்டே ஒரு தீர்வை நாடிய SLTJயை இவ்விடயத்தில் வசைபாடுபவர்கள் கொஞ்சம் நிதானமாக சிந்திக்க வேண்டும்.

இஸ்லாமிய அழைப்புப் பணியில் மாற்று மதத்தவர்களுக்கான அழைப்புப் பணி என்பது இன்றியமையாதது. நாம் ஏற்றிருக்கின்ற ஓரிறைக் கொள்கையை ஏற்காத மக்களுக்கும் எத்திவைக்க வேண்டிய பாரிய கடப்பாடு நம்மத்தியில் சுமத்தப்பட்டிருக்கிறது. இதில் நமக்கு போதிய திறமை, அவகாசம், வளம் போன்ற சாதகமான காரணிகள் இல்லை என்றாலும் ஒரு குழு இவ்விடயத்தில் முழுமூச்சாக பிரச்சாரப் பணியில் களத்தில் இறங்கி இருக்கும் பொழுது குறைந்தப்பட்சம் அவர்களின் வேலைத்திட்டங்களுக்காவது ஒத்துழைப்புக் கொடுப்பதே ஒரு முஃமினின் பண்பாக இருக்க முடியும். அதேவேளை கருத்துத் திணிப்பு, கட்டாய மத மாற்றம், மதங்களை இழிவு படுத்தல் போன்ற அம்சங்கள் இன்றி இஸ்லாம் பற்றிய புரிந்துணர்வுகளை ஏற்படுத்தி இஸ்லாத்தின் மீதான வெறுப்பையும், வீண் சந்தேகங்களையும் களைந்து பிரச்சாரம் செய்வதற்கு நம் நாட்டுச் சட்டம் பூரண சுதந்திரத்தையும் கொடுத்துள்ளது. இத்தகைய ஒரு மாற்றுமததினர்களுக்கான இஸ்லாம் பற்றிய புரிந்துணர்வு நிகழ்ச்சியே நாடாளாவிய ரீதியில் SLTJ அமைப்பினால் நாடாத்தப்பட்டு வந்தன. இதனை குறுக்கு வழியில், ரவுடிச பாணியில் குழப்பிய பொதுபலசேனாக்களை ஒரு வரியேனும் விமர்சிக்காதவர்கள் SLTJ யின் முறைப்பாட்டை மாத்திரம் பந்தி பந்தியாக விமர்சிப்பதற்கான காரணம் வெறும் இயக்கக் கருத்துக் கசப்புணர்வுகள்தானோ என்றே எண்ணத்தோன்றுகிறது.

இந்த நிகழ்ச்சியினூடாக கட்டாய மதமாற்றம் நடக்கிறது என்ற கருத்தும் சமூக வலைத்தளங்களில் ஆங்காங்கே சில சகோதரர்களால் பகிரப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டை சற்றுமே வாய்கூசாமல் எப்படிச் சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை. மார்க்கப் பிரச்சார உரிமையை இனி ஒரு காலத்திலும் செய்ய முடியாது என்ற நிலையை ஏற்படுத்தவா? என்ற சந்தேகம் இத்தகைய அனாமோதய காட்டிக்கொடுப்பின் மூலம் வழுக்கிறதே தவிர இதில் கடுகளவேனும் உண்மை கிடையாது.

அடுத்து சில சகோதரர்கள் சகோ. அப்துர் ராஸிக் அவர்களை கொண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தியமையே பிரச்சினை விஸ்வரூபம் எளக் காரணமாக அமைந்தது; இனி அமையும் என்பதாக சுட்டிக்காட்டியிருந்தனர். ‘புத்தர் மனித மாமிசம் உண்டார்’ என்று கடந்த கால உரை ஒன்றில் சகோ. அப்துர் ராஸிக் அவர்கள் கூறியதை மையப்படுத்தி ஒட்டுமொத்த சிங்கள சகோதரர்களாலும் வெறுக்கப்படுகின்ற ஒறுவரை கொண்டு நடாத்தப்படுவதானது நடுநிலையான பௌத்த மக்களையும் சீண்டுவதாகவே அமையும் என்றும் தமது கருத்துக்களை ஆணித்தரமாக பதிவு செய்திருந்தனர்.

உண்மையில் இக்கருத்து மிகையாக வலிந்து ஏற்படுத்தப்பட்டதொன்று என்பதை புரிவதற்கு இவ்விதி நடைமுறைச்சாத்தியத்திற்கு அப்பாட்பட்டவை என்ற காரணமே பொருந்துகின்றது. ஏனென்றால் கடந்த கால ஒருவரின் தவறுக்காக இனிவரும் காலங்களில் அவரை பெட்டிப்பாம்பாக அடக்கி அவரின் ஆளுமைகளை முடக்குவதானது மனித பலவீனத்திற்கு சாத்தியமே கிடையாது. இந்த விமர்சனங்களை எழுத்திலும், பேச்சிலும் வெளிப்படுத்திக்கொண்டிருப்பவர்கள் கூட தவறுக்கு அப்பாட்பட்டவர்கள் அல்ல. எனவே விமர்சிக்கின்றவர்கள் அவர்களுடைய வாத விதிப்பிரகாரமே அவர்களுக்கு எழுதவோ! பேசவோ! முடியாத நிலையிலே இருக்கின்றனர். சிங்கள மொழியில் ஆழ்ந்த புலமையுள்ள, பேச்சுத் திறமையுள்ள, பல நிகழ்ச்சியில் பங்கு பற்றி பல அனுபவங்களை பெற்றுள்ள ஒருவரை பகிரங்க மன்னிப்புக்கோறிய ஒரு தவறுக்காக வேண்டி இத்தனை திறமைகளையும் காற்றில் பறக்க விட்டுவிட்டு ஒரு உன்னதாமன முயற்சிக்கு தடை ஏற்படுத்துவதானது அறிவுப்பூர்வமான அணுகுமுறையல்ல. மாத்திரமல்லாமல் இதனை வழியுறுத்திக் கூறும் சகோதரர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு சகோ. அப்துர் ராஸிக் தவிர்ந்த ஏனையவர்களை பரிந்துரை செய்வதற்கு கூட கடந்த காலங்களில் இவ்வாரான நிகழ்ச்சிகளுக்கு இலங்கையில் வரலாறு கிடையாது எனும் போது, இஸ்லாம் பற்றிய ஐயங்களுக்கு ஆணித்தரமாக பதிலளிக்கும் ஒருவரை சகட்டுமேணிக்கு மட்டம்தட்டுவது பக்கச்சார்பான விமர்சனக்கண்னோட்டம் என்பதே தெளிவாக புலானாகிறது.

மேலும் SLTJ யின் முறைப்பாட்டை இன நல்லினக்கத்திற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கான ஒரு சமிஞ்சை என்றும் குற்றம் சுமத்தக் கூடியவர்கள் தமது கருத்தில் உறுதியான உண்மையாளர்களாக இருப்பார்களானால், அவர்கள் ஒரு கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும். அதாவது கடந்த மஹிந்த ராஜபக்‌ஷவுடைய அரசாங்கத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக இருந்த ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் அமைச்சு அலுவலகத்திற்குள் (24.04.2014) பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர்கள் அத்துமீறி நுழைந்து குழப்ப நிலையை தோற்றுவித்தமையை யாவரும் அறிந்ததே! இச்சம்பவத்தின் பிற்பாடு அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனின் கோரிக்கைக்கு அமைய பொலிஸாரினால் பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராகவும், குழப்பம் விளைவித்த பிக்குமார்களுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதில் கேள்வி என்னவென்றால், இன்று அதி பண்டிதர்கள் போல் SLTJ யின் முறைப்பாட்டை அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா உட்பட மக்களின் அதிக செல்வாக்கைப் பெற்ற அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து இதில் கூடுதல் கவனம் செலுத்தி இவ்வியக்கத்தினரின் இத்தகைய செயற்பாட்டுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பக்கம் பக்கமாக விமர்சித்து எழுதிக்கொண்டிருக்கின்றவர்கள், ஏன் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின்  முறைப்பாட்டை ஏலெடுத்தும் பார்க்கவில்லை? அம்முறைப்பாடு முஸ்லிம்களுக்கு பாரிய அச்சுறுத்தல் சமிஞ்சையாக தெரியவில்லையா? முஸ்லிம்களுக்கு பாதகமான, இனவாதிகளுக்கு முட்டுக் கொடுத்துக்கொண்டிருந்த ஆட்சியில் அவர்களுக்கு எதிராக முறையிட்டமை முஸ்லிம்களுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தாதாம்; மற்றும் முஸ்லிம்களுக்கு சாதகமான இனவாதிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழும் தற்போதைய ஆட்சியில் மனித உரிமை மீரலுக்கு எதிராக இனவாதிகளை அடக்குவதற்காக SLTJ முறைப்பாடு செய்தமை முஸ்லிம்களுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துமாம். இவர்களின் இந்த (அ)நியாயமான(?) விமர்சனப் பார்வையின் உள்நோக்கத்தை சிந்திப்பவர்கள் பிரிதரிந்து புரிந்து கொள்வார்கள்..

எனவே இவ்விவகாரத்தை ஒரு நேரிய, நடுனிலை கண்ணோட்டத்தோடு அணுகுவோமானால் SLTJ யின் செயற்பாடு முறைப்படுத்தப்பட்ட சட்ட வழியில் நின்றும் சரியானதே என்பதில் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை.

சிறுபான்மையினரின் மத உரிமையில் தொடர்ச்சியாக கைவைக்கின்ற பலசேனாக்களை சட்டவழியில் துணிச்சலோடு எதிர்கொள்ளும் அவ்வமைப்பினரை இயக்க வேறுபாடுகள், கருத்து முரண்பாடுகள், தனிப்பட்ட கசப்புணர்வுகளுக்கு (இவ்விடயத்தில்) அப்பால்  உற்சாகமூட்டி பாராட்டு தெரிவிக்க வேண்டுமே தவிர ‘இதன் மூலம் முஸ்லிம்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படலாம்’ என்ற நொண்டிக்காரணங்களை கூறி, இனவாதிகளின் இன நல்லுறவை சிதைக்கும் கொள்கைக்கு உறமூட்டி, அவர்களை உச்சாணிக் கொம்பில் ஏற்றி வரலாற்றுத் தவறொன்றுக்கு வித்திடும் இத்தகைய கருத்துப் பகிர்விலிருந்து விடுவித்துக் கொள்வதே சாலச் சிறந்ததாகும்.

ஒரு சமூகத்தின் மீதுள்ள வெறுப்பு நீதியை நிலை நாட்டுவதை விட்டும் உங்களை தடுத்து விட வேண்டாம் என்று ஏக இறைவனாகிய அல்லாஹ்வே நமக்கு அறிவுறை புகட்டியிருக்கும் போது பலசேனாக்களின் அராஜக, அட்டூளிய அத்துமீரல்களுக்கு எதிரான SLTJ யின் முறைப்பாட்டை சமூக விரோத செயலாக உறுமாற்றி பலசேனாக்களை உச்சிகுளிர வைப்பது நீதியா? என்பதை ஒன்றுக்கு பல விடுத்தம் சிந்திப்பது பொறுத்தமாக இருக்கும்.

முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன்: 5:8)

போரட்டங்கள், சவால்கள், எதிர்ப்புக்கள் இன்றி உரிமைகளை லாபகமாக வென்றெடுப்பது என்பது எட்டாக் கணிக்கு கொட்டாவி விடுவது போன்றதேயாகும். ஆகவே நல்லாட்சி மலர்ந்திருக்கின்ற இத்தருணத்தில் இனவாதிகளின் இம்சைகளுக்கு இம்மியளவும் தலைசாய்க்காமல் ஜனநாயக வழியில் உரிமைகளை உரிமையோடு வென்றெடுப்பதற்கு காலம் கனிந்திருக்கிறது. துறை சார்ந்தவர்கள் கூட இதற்கு சமூக அக்கரையுடன் முனைந்து முனைப்பு காட்டுவதை பார்க்கும் போது ஒரு சாதகமான சமிஞ்சையே பளிச்சிடுகிறது. எனவேதான் SLTJயின் இந்த துணிச்சலான ஜனநாயக விரோத செயலுக்கெதிரான முறைப்பாட்டை இதர முரண்பாடுகள், கசப்புணர்வுகள் தவிர்த்து மனதால் பாராட்டுவதோடு, இனி வரும் காலங்களில் மாற்றுமத அன்பர்களுக்கான இஸ்லாம் பற்றிய புரிந்துணர்வு கேள்வி பதில் நிகழ்ச்சிகள் எவ்வித அசம்பாவிதங்களுமின்றி இனிதே நடைபெற பிரார்திக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ஈமானிய பலத்தையும், உனக்கு மட்டுமே அஞ்சி உனது மார்க்கத்தை மேலோங்கக் செய்யக் கூடிய மன உறுதியையும் தந்தருள்வானாக!

குறிப்பு : இவ்வாக்கம் நீதிக்கும், நியாயத்திற்கும், ஜனநாயக உரிமைக்குமானதும்; அநியாயத்திற்கும், அராஜக்திற்கும், ஜனநாயக விரோத செயற்பாட்டிற்கும் எதிரானதுமான ஒரு குரலே தவிர SLTJயை வக்காலத்து வாங்கும் அல்லது அவர்களின் அனைத்து கொள்கையையும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு பரிசுத்தமான ஒரு அமைப்பாக கருத்திற்கொண்டு வரையப்பட்டவை அல்ல என்பதை பதியவைத்துக் கொள்கிறேன்.










No comments:

Post a Comment