23 Dec 2014

வாக்களிப்பை உதாசீனப்படுத்திவிடாதீர்கள்!



ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் கிட்டத்தட்ட இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சி இருக்கின்றன. கடந்த கால ஜனாதிபதித் தேர்தல்களை போன்றல்லாமல் இம்முறை முஸ்லிம்களுக்கு மிகவுமே சவால் மிக்க ஒரு தேர்தலாகவே  நோக்கப்படுகிறது. ஏனென்றால் முஸ்லிம்களின் கடந்த கால காயங்கள் இன்னும் ஆராவில்லை. ஆரும் படியாகவும் இருக்கவில்லை. எனவே இத்தேர்தல் முஸ்லிம்களை பொறுத்த வரையில் தமது கைக்கு வந்த கடிவாளம் போன்று ஒருகை பார்க்க இருக்கிறார்கள் என்பதையே உணர்த்தி நிற்கிறது.  இதனை வெறுமனே உதாசீனப் படுத்தி விட்டு கடிவாளம் கைமாறிப் போன பின் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணி பயன் இல்லை.


எனவேதான் நாம் இக்காலகட்டத்தில் ஆழமாக சிந்திக்க வேண்டிய இன்னொரு பக்கமும் இருக்கிறது. அதாவது முஸ்லிம்களின் வாக்கு விழும் விகிதம் பலதரப்பினரிடத்தில் அலவலாவிய பின்னர் மிகவும் கவலைக்கிடமான பரிதாபகரமான நிலையையே அவதானிக்க முடிந்தது. காத்திரமான ஒரு நல்ல முடிவை எடுத்த பிற்பாடு முடிவை கச்சிதமாக முடிக்க முனைப்பு காட்டத குறையே மிஞ்சி நிற்கிறது. இவ்விடயத்தில் விழிப்புணர்வூட்டும் நோக்கில் இச்சிறிய கட்டுரை வரையப்படுகிறது.

வாக்களிப்பதில் காட்டும் ஆர்வம் வெகுவாகவே மாக்கள் மன்றில் குறைந்து வருகிறதையே தனி நபர் உரையாடல்களின் போது தொனிக்கிறது. இதனை பிரதிபலிக்கும் விதத்தில் ஒருவரின் கூற்றுக்கள் இவ்வாறு அமைந்திருந்தன.  "நான் ஓட்டு போட்டுத்தான் இவரு ஜனாதிபதியாக வரப்போராரு?"
"ஒரு நாள் வியாபாரத்தை நிறுத்தி விட்டு ஒட்டுப்போடப்போனால் அந்த நாளுக்குறிய சம்பாத்தியத்தை யாரு கொடுப்பாரு?" 
என்று கேள்விகளை அடுக்குகின்றனர்.

ஆனால் இக்கேள்விகள் வெளிப்படையில் சரி போன்று தென்பட்டாலும் சமூக தூரனோக்கற்ற சிந்தனையின் வெளிப்பாடு என்றே கூற வேண்டும். ஒருவரின் ஓட்டு மாத்திரம் ஜனாதிபதியை தீர்மானிப்பதில்லை. என்றாலும் இவ்வாறு அனைவரும் சிந்தித்தால் கடைசியில் நஷ்டப்படப் போவது நமது சமூகம் என்பதை புரியக் கடமைப்பட்ட்டுள்ளோம். சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள் ஒவ்வொரு தனி நபரும் முயற்சி செய்து வாக்களித்தால்தான் நல்ல பிரதிபலனை அடைய முடியும். மாற்றமாக இக்குறிய சிந்தனையின் பிரதிகூலம் அரசனுக்கு  பால் ஊற்றிய மக்களின் கதை போல்தான் ஆகிவிடும். 

நமது சமூகம் வியாபாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது பாராட்டத்தக்கது. ஆனாலும் சில சந்தர்ப்பங்களில் வியாபாரத்தைக் கொண்டு சமூக அக்கரையை அடகு வைத்துவிடுகின்றனர். சமூகத்தின் உரிமைகளை பாதுக்காக்க களத்தில் இறங்கி போராடுதல், ஹர்தால் கடையடைப்பு போராட்டங்களை நடத்துதல் போன்ற சமூக அக்கரையோடு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் தன்நலம் பாராது வியாபாரத்தை குறிப்பிட்ட காலத்தில் மாத்திரம் பகிர்ஷ்களிப்பது தியாக மனப்பாங்கின் அடையாளமாகும். 

நமது சமூகத்தில் பெருவாரியான மக்கள் வெளிப் பிரதேசங்களிலே தொழில் புரிகின்றனர். இந்த சூழ்நிலையில் சமூகப் பொறுப்புவாய்ந்த இத்தேர்தலில் ஒருநாள் அற்ப உலகதாங்களுக்காக வாக்குச் சந்தர்ப்பத்தை புறந்தள்ளி விட்டு சமூகத்தை பலிக்கடாவாக்குவது பாரிய தவறாகும். தற்காலிக தத்தமது சுயநலத்திற்காக, நீண்டகால ஒட்டுமொத்த சமூகத்தையும் நோக்கிய அபாய சமிஞ்சைகளின்  பிரகாசத்திற்கு வாக்களிப்பில் காட்டும் இவ்வசமந்தப்போக்கு உந்துசக்தியாக இருந்து விடலாம். 

அதே நேரத்தில் வியாபரத்தை எவ்வித பிரச்சினைகளும், இடையூறுகளும் இன்றி உரிமையோடு மேற்கொள்வதற்கு (வெளிப்படையில்) சிறந்த ஒரு ஆட்சியாளரை தேர்வு செய்யும் உரிமை ஒவ்வொருவரின் மீதும் சுமத்தப்பட்டுள்ளது. இன்னொருவகையில் குறிப்பிடுவதாயின் இத்தேர்தல் ஒவ்வொருவரின் அமானிதம், பொறுப்புமாக இருகிறது. இவ்வமானிதத்தை சரியான முறையில் பயன்படுத்துவது எல்லோரின் மீதும் கடமையாக இருக்கிறது. 

எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாம் அதிகப்பட்ச வாக்குகளை பதியச் செய்ய வேண்டும். இயன்றவரை கடந்த காலங்களை விட அதிகப்படியான வாக்குகளை இம்முறை பதியச்செய்வதன் மூலம் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு நல்ல மாற்றத்தைக் கொண்டுவர முடியும். 

அனைத்தையும் அல்லாஹ்வே அறிந்தவன்.

MK YASIR

No comments:

Post a Comment