29 Mar 2015

பணம் படுத்தும் பாடும்… இஸ்லாத்தின் இலகு வழியும்


"பணத்தை கண்டால் பிணமும் வாய் திறக்கும்" என்பது முதுமொழி. அதை சற்றே குறைவின்றி பிரதிபலிக்கும் விதமாக, பணம் இன்றைய மனிதனை அடிமைப் படுத்திருக்கின்றது. இன்று பணம் ஒருமனிதனிடத்தில் இல்லை என்றால் அவன் உலகத்தில் வாழ்வதில் அர்த்தமேயில்லை என்றளவிற்கு, பணம் உயிருக்கு நிகராக நோக்கப்படும் அவலம் மனிதனை பீடித்திருக்கிறது. ஏனென்றால் பணம் இன்று மனிதனுடைய அனைத்து அம்சங்களிலும் ஊடுறுவி செல்வாக்குச் செலுத்துகின்றது என்பதை மறுக்க முடியாது.

எனவேதான் மனிதன் பணத்துக்காக நாயாய், பேயாய் அலைகின்றான். அதை அடைந்து கொள்வதற்கு இரவு பகல், மழை வெயில் என்று பாராமல் தனது வாழ்க்கையே அரப்பணிக்கின்றான். மானம், மரியாதை, குடும்பம், குழந்தை, சொந்தம், பந்தம், வீடு, நாடு என்று அனைத்தையும் பணத்துக்காக  வேண்டி துச்சமாக துறக்கின்றான். பொய், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கடத்தல், கலப்படம் என்று பஞ்ஞமா பாதகங்களையும் பணத்திற்காக பயமின்றி செய்யத் துணிகின்றான். இத்தனைக்கும் தனக்கு பணம் கிடைத்தால் போதுமென்ற தப்பெண்ணம்தான் அடிப்படைக் காரணம். மட்டுமல்லாமல் கர்வம், பெருமை, மற்றவர்களை மட்டம் தட்டல், தற்பெருமை பாரட்டல், கஞ்ஞத்தனம் போன்ற கூடாத துர் குணங்களாளும் பணம் மனிதனை ஆட்டிப்படைத்து விழுங்கிவிட்டிருக்கின்றது. பணம் அளவு கடந்து இருப்பவர்கள், பணம் அளவோடு இருப்பவர்கள், பணத்திற்காக திண்டாடுபவர்கள் என்று அனைத்துத் தரப்பினர்களும் பெரும்பாலும் பணத்தின் காரணமாகத்தான் தனது மானிடப் பண்புகளையெல்லாம் மறந்து மிருகங்களை விட கேவலமானவர்களாக மாறிவிடுகின்றனர்.  


ஆனால் இத்தனைக்கும் இஸ்லாம் பணத்தின் காரணமாக மேற்சொன்ன அனைத்து குளருபடிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து பணத்தின் தார்பரியங்களை மிக ஆழமாக அலசி ஆராய்து மனித குலத்திற்கு அற்புத வழிகாட்டுதல்களை மற்றும் தீர்வுகளை விட்டுச்சென்றிருக்கின்றது. பணத்தை ஒருவன் எப்படி கையால வேண்டும்? பணத்தை எந்த அளவுகோள் கொண்டு நோக்க வேண்டும்? பணத்தின் சாதக, பாதக தன்மைகள் என்ன? போன்ற கேள்விகளுக்கு இஸ்லாம் மிகத் தெளிவான பதில்களை எடுத்தியம்பிக் கொண்டிருக்கின்றது. இஸ்லாத்தின் இப்போதனைகளை ஒருவன் முழுமையாக கடைபிடிப்பானாயின் பணம் ஒருகாளும் அவனை அடிமைப் படுத்திவிடாது. பணம் எப்பேயர்ப்பட்ட பாடு படுத்தினாலும் அவன் மனித மாண்புகளை மறந்து படுகுழியில் விழுந்துவிட மாட்டான். இஸ்லாம் கூறும் பொருளாதாரம் மனிதனை தடம்புரளாமல் நேரிய வழியில் நெறிப்படுத்துகின்றது என்பதை அதனுல் ஆழ்ந்து நுழைந்தவர்களுக்கு அனுபவரீதியில் உணர்த்தும் பாடமாக இருக்கின்றது. எனவே இஸ்லாத்தின் ஒளியில் பணத்தின் ஆழ அகலங்களை விளங்கிக் கொள்வது ஒவ்வொருவரின் கடமையாக இருக்கின்றது.

இஸ்லாத்தில் பணத்தின் அளவுகோள்?

பணம் இன்று மனிதனிடத்தில் இன்றியமையாத இமாலய குறிக்கோளாக இருக்கின்ற பட்சத்தில், இஸ்லாம் மார்க்கம் பணத்தை தனித்துவமான ஒரு இடத்தில் வைத்து பார்கின்றது. பணத்தை அடைந்து கொள்வதற்கு எம்மாளான முயற்சிகளை செய்வதோடு அதையே குறிக்கோளாக கொண்டு நோக்குவதை தடைசெய்கின்றது. 

“பெண்கள், ஆண் மக்கள், பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள், அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள், (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது. இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும். அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு. (அல்குர்ஆன்:3:14) ”
அல்லாஹ் இந்த வசனத்தில் பணத்தோடு சம்பந்தப்படுகின்ற அனைத்து சுகபோகங்களையும் குறிப்பிட்டு அவைகளை காட்டிலும் உங்களுக்கு அல்லாஹ்விடம் அழகிய தங்கிமிடம் அதாவது சுவர்க்கம் இருப்பதாக வாக்களிக்கிறான். எனவே இஸ்லாத்தில் பணத்திற்கு உள்ள பெருமதி வெறும் இரண்டாம் பட்சம்தான். 

 ”அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:நபி (ஸல்) அவர்கள், "மண்ணறைகளைச் சந்திக்கும்வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திசை திருப்பிவிட்டது" என்று தொடங்கும் (102ஆவது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தபோது, அவர்களிடம் நான் சென்றேன்.அப்போது அவர்கள், "ஆதமின் மகன் (மனிதன்), எனது செல்வம்; எனது செல்வம்" என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?" என்று கேட்டார்கள். (புஹாரி 5665)”

மனிதன் அலைந்து திரிந்து தேடும் பணம் அவனுக்கு எந்தளவுக்கு பிரயோசனம் அளிக்கின்றது என்றால், அவன் உண்டு கழித்ததும், உடுத்து கிழித்ததும், தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர எதுவும் அவனுக்கு பிரயோசனம் இல்லை, என்ற வாழ்க்கைக்காக சேர்த்து மீதப்படுத்தும் பணத்தின் யதார்த்தத்தை அற்புதமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோடிட்டுக்காட்டுகிறார்கள். எனவே பணம் மேல்மிச்சமாக இந்தளவிற்குதான் திருப்திப்படுத்தும் என்பதில் எவருக்கும் இரண்டு கருத்திற்கு இடமில்லை.

“(முஃமின்கள்) எத்தகையோர் எனில், இறைவனை நினைவுகூருவதை விட்டும், தொழுகையை நிலைநாட்டுவது மற்றும் ஜகாத் கொடுப்பதை விட்டும் வியாபாரமும் கொள்வினை கொடுப்பினையும் அவர்களைப் பாராமுகமாக்கி விடுவதில்லை; இதயங்கள் நிலைகுலைந்து, பார்வைகள் நிலைகுத்தி விடக்கூடிய ஒருநாள் குறித்து அவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கின்றார்கள். (அல்குர்ஆன் 24:37) ” 

பணத்தை சம்பாதிப்பதுதான் தனது குறிக்கோள் என்று பணத்திற்காகவே இஸ்லாத்தின் போதனைகளை உதாசீனம் செய்யும் மக்களை பார்த்து அல்லாஹ் ”நீங்கள் சம்பாதிக்கும் பணம் எனது கட்டளைகளை, எனது நினைவுகளை விட்டும் பராமுகமாக்க வேண்டாம்” என்கிறான். அதவாது இவ்வசனத்தை இன்னும் இலகுவாக புரிந்து கொள்வதென்றால், நாம் சம்பாதிக்கும் பணம் இஸ்லாமிய விழுமியங்களை தகர்க்கும் விதமாக இருக்குமானால் அப்பணம் நமக்குத் தேவையே இல்லை என்பதாகவே அல்லாஹ் இவ்வசனத்தில் பணத்திற்கு உறுதியான கடிவாளம் இடுகிறான். 

இஸ்லாம் கூறும் பணம்படைத்தவர்களின் பண்பாடு

அல்லாஹ் இவ்வுலகப்பந்தில் மனிதர்களை சமநிலையோடு, உலக இயங்கு நிலையில் படைத்திருக்கிறான். உலகம் முழுவதும் செல்வந்தர்களாகவும் படைக்கவில்லை அத்தோடு ஏழை எளியவர்களாகவும் படைக்கவில்லை. உலகம் தங்குதடையின்றி இயங்குவதற்காகவும், அவற்றைக்கொண்டு மனிதர்களை சோதிப்பதற்காகவும்  இருதர்ப்பினரையும் சம நிலையோடு அல்லாஹ் படைத்திருக்கிறான். எனவேதான் இவ்வுலகில் தன்னை ஒரு பணக்காரனாக அல்லாஹ் தேரந்தெடுத்திருக்கின்றான் என்றால் தன்னை இறைவன் சோதிக்கின்றான் என்ற மனநிலை ஒவ்வொரு செல்வந்தனிடமும் குடிகொள்ள வேண்டும். தனக்கு பணத்தை தாராளமாக தந்திருக்கின்றான் என்றால் எனது முயற்ச்சி, திறமை, அனுபவம் போன்ற காரணங்களுக்கு அப்பால் அல்லாஹ் எனது செல்வத்தின் மூலம் என்னை எடைபோட விரும்புகின்றான். 

இஸ்லாம் கூறும் கட்டளைகளை, நெறிமுறைகளை, உபதேசங்களை மற்றும் கடமைகளை தனது செல்வநிலை காரணமாக தட்டிக் கழிக்கின்றானா? இஸ்லாம் வழியுருத்தும் அழகிய குணாம்சங்களை பணத்திமிறின் பிரதிபலிப்பால் பட்டையடிக்கின்றானா? அத்தோடு பணச்செழிப்பின் கௌரவ மேலீட்டால் வீண்விரயத்தோடு பணத்தை அழித்தொழிக்கின்றானா? என்பன போன்ற பல்வேறுபட்ட சோதனைக்கேள்விகள் நிச்சயம் வல்லவன் அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஆரயப்படும் என்பதை பணம்படைத்தவர்கள் சிந்திக்க கடமப்பட்டுள்ளீர்கள். 

அல்லாஹ் தனது அருள்மறையில் பல்வேறு இடங்களில் ”நீங்கள் பொருளாதாரத்தை தேடுவதோடு அதில் நீங்கள் சிறந்து விளங்கினீர்களானால் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைத்து அவனை புகழுங்கள்” என்பதாக சொல்லிக்காட்டுகிறான். 

”பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள் நீங்கள் சித்தியடையும் பொருட்டு அடிக்கடி அல்லாஹ்வை நினைவுக் கூறுங்கள். (அல்குர்ஆன் 62:10)”

“(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களுக்கு பூமியில் சகல வசதிகளையும் அளித்து அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஏற்படுத்தினோம் (இவ்வாறிருந்தும்) நீங்கள் நன்றி செலுத்தவதோ வெகு சொற்பம். (அல்குர்ஆன் 7:10)”

“நமக்கிடையில் (ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் அருள்புரிந்து விட்டான்? என்று (செல்வந்தர்கள்) கூற வேண்டுமென்பதற்காக அவர்களில் சிலரை சிலரைக்கொண்டு நாம் இவ்வாறு சோதித்தோம். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனில்லையா? (அல்குர்ஆன் 6:53. )”

பணம் படைத்தவர்கள் தமக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட செல்வத்தின் காரணமாக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதோடு மட்டுமல்லாமல் அதற்குறிய இஸ்லாம் சொல்கின்ற கடமைகளையும் சரிவர நிறைவேற்ற வேண்டும். 

“அத்தகையோர் உலோபித்தனம் செய்வதுடன், (பிற) மனிதர்களையும் உலோபித்தனம் செய்யும்படித் தூண்டி அல்லாஹ் தன் அருட்கொடையினின்று அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக்கொள்கிறார்கள்; அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். (அல்குர்ஆன் 4:37. )”

“அவர்கள் மறைவானவற்றை (உண்டென்று) நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள் (தவறாது கடைபிடிப்பார்கள்). நாம் அவர்களுக்கு வழங்கிய (பொருள், செல்வம் போன்ற)வற்றிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள். (அல்குர்ஆன் 2:3. )”

“(நபியே!) அல்லாஹ்வுடைய பாதையில் தங்களுடைய பொருளைச் செலவு செய்கின்றவர்களுடைய (பொருளின்) உதாரணம், ஒரு வித்தின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. அ(ந்த வித்)து ஏழு கதிர்களைத் தந்தது. ஒவ்வொரு கதிரிலும் நூறு வித்துக்கள் (ஆக எழுநூறு வித்துக்கள் அந்த ஒரு வித்திலிருந்து உற்பத்தியாயின.) அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு (இதை பின்னும்) இரட்டிப்பாக்குகின்றான். ஏனெனில், அல்லாஹ் (வழங்குவதில்) மிக்க விசாலமானவனும், மிக அறிந்தவனுமாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 2:261. )”

நடுநிலை வர்கத்தினருக்கும் ஏழ்மை வர்கத்தினருக்கும் இஸ்லாம் கூறும் அறவுறைகள்

வல்லவன் அல்லாஹ் இப்பூமியில் சிலபேறுக்கு பணத்தை அளந்து கொடுத்திருப்பான். அதாவது அவர்களுடைய அடிப்படை வாழ்வாதாரத்திற்கு போதுமான உணவு, உடை, இருப்பிடம் என்பவற்றிற்கு மேல்மிச்சமாக சுகபோகம் அல்லது ஆடம்பர வாழ்க்கைக்கு தேவையான பொருளாதாரம் அவர்களிடம் காணப்படாது. அதே போன்று சிலபேருக்கு அல்லாஹ் பணத்தை குறைத்துக் கொடுத்திருப்பான். தமது அன்றாட அடிப்படை செலவுகளுக்கே பணம் போதுமானதாக காணப்படாது. அன்றாட வாழ்கைச் செலவுகளுக்கான பணத்தை சேமிப்பதற்கே சொல்லனா துன்பங்களை சுமந்து கொள்வார்கள். இவ்வாறு பணத்தேக்கநிலையால் இருதரப்பினர்களும் அதிகமதிகம் மனஉளைச்சலுக்கு ஆள்படுகின்றனர். மேழும் இவ்விரு வர்க்கத்தினர்களும் தமது பணத்தேவையை பூர்த்தி செய்வதற்காக வேண்டி நியாயமான உழைப்பிற்குப் புறம்பாக  குறுக்கு வழிகளில் சம்பாதிக்க முற்படுகின்றனர். 

ஆனாலும் இஸ்லாத்தின் நேரிய கோட்டில் இறைதிருப்தியின் பால் சருகாமல் பயணிப்பவர்கள் இஸ்லாத்தின் வழிகாட்டுதல்களை கொண்டு அடிப்படை இலக்கை மனதில் ஆழப்பதிந்து கொண்டு கிடைத்ததைக்கொண்டு போதுமாக்கிக் கொள்வார்கள். இன்னும் ஹலாலன முறையில் சம்பாதிக்க முற்படுவார்கள். தனக்கு மேலுல்லவர்களை பாராமல் கீழுல்லவர்களை பார்த்து மனதை தேட்டிக் கொள்வார்கள். மேல்மிச்ச பணத்திற்காக தமது சுயமரியாதையும், மானத்தையும் அவர்கள் இழக்க மாட்டார்கள். அல்லாஹ்வின் தூதரினதும் அவர்களுடைய சஹபா தோழர்களினதும் ஏழ்மை வாழ்க்கையுடன் ஒப்பிட்டு அல்லாஹ்விடம் இரு கரமேந்தி கண்ணீர் விட்டு இறைவனுக்கு நன்றி செலுத்துவார்கள். இவற்றைத்தான் இஸ்லாம் இவ்விருவர்கத்தினருக்கும் பசுமரத்து ஆணிபோல் நட்டு வைத்திருக்கும் உறுதியான உபதேசங்களாகும்.  

எனவே இஸ்லாம்  பணத்தைக் கையாளச் சொல்லும் வழிவகைகளை அறிந்து பணத்திற்காகத்தான் வாழ்க்கை என்றில்லாமல் வாழ்கைக்குத்தான் பணம் என்ற உணர்வுடன் சுவரக்கத்திற்கான பாதையை சீர்செய்ய முயற்சிப்போம். 

”இன்னும் ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை” (அல் குர்ஆன் 51:56)

No comments:

Post a Comment