[முரண்பாட்டின் தோற்றம்]இந்த நூற்றாண்டு மட்டுமல்ல வரலாறு நெடுகிலும் முரண்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகத்தான் நோக்கப்படுகிறது. மனிதனுக்கே உரிய சில பலவீனங்கள், துர் பண்புகள் முரண்பாட்டை தோற்றுவிக்கின்றன. பலவீனங்கள், துர் பண்புகள் நபருக்கு நபர் வேறுபடும் பொழுது சுயமாகவே முரண்பாடு தோற்றம்பெறுகிறது. மனித பலவீனம், துர் பண்பு என்ற அஸ்திவாரத்தில்தான் முரண்பாடு என்ற கட்டிடம் கட்டியமைக்கப்படுகிறது.
[கருத்து முரண்பாடும் மனம் முரண்பாடும்]
முரண்பாட்டை இரண்டு பிரதான பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று கருத்து முரண்பாடு. இரண்டு மனம் முரண்பாடு. கருத்து முரண்பாடு என்பதை வரைவிலக்கனப்படுத்தினால், ஒரு விடயம் தெளிவாக இல்லாமல் சர்ச்சைக்கு உட்பட்ட அல்லது உடன்பாட்டுக்கு அப்பாற்பட்ட கருத்துக்களில் முரண்படுவது கருத்து முரண்பாடு ஆகும். ஒரு விடயம் தெட்டத் தெளிவாக சர்ச்சைக்கு அப்பாற்பட்ட அல்லது உடன்பாட்டுக்கு உட்பட்ட கருத்துக்களில் முரண்படுவது மன முரண்பாடு எனலாம். உதாரணத்திற்கு இஸ்லாத்தின் அடிப்படையான, நம்பிக்கை சார்ந்த விடயங்களில் முரண்படுவது என்பது நிச்சயம் அது கருத்து முரண்பாடே அல்ல. மாற்றமாக அது தெளிவான மனமுரண்பாடு. இஸ்லாத்தில் அடிப்படை மூலதாரம் எது? என்பதில் ஒருவருக்கு கருத்து முரண்பாடு ஒருபோதும் தோற்றம் பெறாது. அப்படி அவருக்கு அதில் தோன்றினால் அது அவரின் மனம் முரண்பாடு. தெளிவான உடன்பாடான விடயங்களில் கருத்து முரண்பாடு என்பது தலை காட்டவே முடியாது. இந்த நிதர்சன விதியை மேலும் தெளிவாக புரிய வைப்பது என்றால், ஒருவர் தனது தந்தையை பார்த்து இவர் என்னுடைய தந்தை இல்லை என்கிறார். ஆனால் அவனுடைய தாய் மற்றும் உறவினர்கள் இவர்தான் உன்னுடைய தந்தை என்கிறார்கள். இந்த இடத்தில் அவர் முரண்படும் விடயம் நிச்சயம் கருத்து முரண்பாடு அல்ல. மனோ இச்சையால் மனமுரண்படுகிறார். அதே கோணத்தில் சற்று வித்தியாசமாக அவனுடைய தாய் அவர் உன்னுடைய தந்தை அல்ல என்றும் உறவினர்கள் அவர் உன்னுடைய தந்தை என்றும் சொல்கிறார்கள் என்றால் இப்பொழுது இந்த இடத்தில் அவர் முரண்படுவது கருத்து முரண்பாடு. கருத்து முரண்பாட்டிற்கும் மன முரண்பாட்டிற்குமுள்ள வித்தியாசம் இதுதான்.
[முரண்பாடும் பிரிவினையும்]
கருத்து முரண்பாட்டால் பிரிவது என்பது ஆகுமானது அல்ல. இஸ்லாம் கருத்துக்களால் பிரிவதை தடுக்கிறது. கருத்து முரண்படுபவர்களுடன் பிரிந்து நிற்பது கூடாது. அதே நேரத்தில் மனமுரண்படுபவர்களுடன் ஒட்டி நிற்பதும். கூடாது. ஒரு விடயத்தில் கருத்து வேறுபாடு தோன்றும் பொழுது. அவ்விடயத்தில் உடன்பாட்டுக்கான அனைத்து கைகாரியங்களையும் செய்வது அவசியம். இவ்வாறு உடன்பாட்டுக்கான அனைத்து முஸ்திபுகளையும் செய்தும் உடன்பாட்டுக்கான அறிகுறிகள் தெறியவில்லை என்றால் இந்த கருத்து முரண்பாட்டை கொண்டு பிரிந்து செல்வது என்பது இஸ்லாத்தை கூறு போடுவது போன்றதாகும். முன்னமே சொன்னது போன்று அடிப்படை, நம்பிக்கை சார் விடயங்களில் கருத்து முரண்பாடு தோன்றாது. தோன்றுவதும் சாத்தியமில்லை. தோன்றுகின்ற கருத்துமுரண்பாடுகளில் பெரும்பாலானவைகள் உபரியான கிளை விடயங்களில்தான். அதே நேரம் இம் முரண்பாடு அடிப்படையில் சரியாக இருந்து அதனடிப்படையில் தோன்றிய முரண்பாடு. எனவே இவ் உபரியான கிளை விடயங்களில் தோன்றும். கருத்து முரண்பாடுகளை வைத்து பகைமை பாராட்டி நீ வேறு நான் வேறு. நீ சுத்த வழிகேட்டில் இருக்கிறாய். உனது நிலைப்பாடு இறைநிராகரிப்புக்குறிய நிலைப்பாடு என்றெல்லால் வஞ்சித்துக் கொள்வது. தூய மார்க்கத்தில் தூசி படிவதற்கு சமம். இதைத்தான் அல்லாஹ் தனது அருள் மறையில் பல்வேறு இடடங்களில் தெளிவுபடுத்துகிறான்.
8:46 وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ ۖ وَاصْبِرُوا ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
8:46. இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.
30:32 مِنَ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا ۖ كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ
30:32. எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.
இவ்வாறு ஒரு சில மார்க்க மசாஇல் விடயங்களில் கருத்து முரண்பாடு தோன்றுவதனால் அவற்றை வைத்து அடிப்படை, நம்பிக்கை சாரந்த விடயங்களில் தெளிவுடன் ஒரு நிலைப்பாட்டில் இருக்கின்றவர்களை பிரித்து நோக்குவது, நமக்கு நாமே குழி வெட்டுவது போன்றதாகும். நபி (ஸல்) அவர்கள் தெளிவற்ற விடயத்தில் முயற்சியின் பயனாக எட்டக்கூடிய முடிவுகளின் படி எளக்கூடிய கருத்து முரண்பாட்டை ஆதரித்து உள்ளார்கள்.
‘தீர்ப்புச் சொல்பவர் (ஹாகிம்), இஜ்திஹாத் செய்து அவரது முடிவு சரியாக அமைந்தால் அவருக்கு இரண்டு கூலிகள் உண்டு. அவரது முடிவு தவறாக அமைந்து விட்டால் அவருக்கு ஒரு கூலி உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அமருப்னுல் ஆஸ் (ரழி), நூல்கள் : புகாரி, முஸ்லிம்)
அஹ்ஸாப் யுத்தம் முடிந்து திரும்பிய நபியவர்கள், ஸஹாபாக்கள் சிலரை பனூ குரைழாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்களை அனுப்பும்போது ‘பனூ குரைழாவில் அன்றி யாரும் அஸரைத் தொழ வேண்டாம்’ எனக் கூறினார்கள். பனூ குரைழாவை நோக்கி செல்லும் வழியில் சிலர் அஸர்த் தொழுகைக்கான நேரத்தை அடைந்து கொண்டார்கள். அப்போது ‘பனூ குரைழாவில் அன்றி யாரும் அஸரைத் தொழ வேண்டாம்’ என்ற நபியவர்களின் ஹதீஸைப் புரிந்து கொள்வதில் அவர்கள் மத்தியில் இரண்டு விதமான கருத்துக்கள் தோன்றின. சிலர் பனூ குரைழாவுக்குச் சென்றுதான் அஸரைத் தொழ வேண்டுமெனப் புரிந்து கொண்டார்கள். எனவே, அங்கு சென்றுதான் அதனைத் தொழுவோம் என்று கூற, மற்றும் சிலர் அவ்வாறல்ல. நேரமாகிவிட்டதால் இவ்விடத்திலேயே தொழ வேண்டுமெனக்கூறி அங்கு தொழுதனர். பின்னர் இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எத்தி வைக்கப்பட்டபோது இரு சாராரில் யாரையும் அவர்கள் கண்டிக்கவில்லை என இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்கள் : புகாரி, முஸ்லிம்)
[முரண்பாட்டிற்கு மத்தியில் இஸ்லாம்]
கருத்து முரண்பாடுகள் இஸ்லாத்தில் இருப்பதனால் இஸ்லாம் ஒரு தெளிவற்ற மார்க்கமா? அல்லது இஸ்லாம் அனைத்தையும் தெளிவுபடுத்த வில்லையா? போன்ற கேள்விகள் எம்மத்தியில் எழுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. முதலில் நாங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டிய விடயம், இஸ்லாம் மார்க்கத்தில் எவ்வித முரண்பாடோ எவ்வித தெளிவற்ற தன்மையோ கிடையவே கிடையாது. சுருங்கச்சொன்னால் இஸ்லாத்தில் எவ்வித குறையுமில்லலை மாற்றமாக அதை அணுகுகின்ற மனிதர்களிடத்தில்தான் குறைகள் மற்றும் பலவீனங்கள் இருக்கின்றன. அல்லாஹ் இவ்வுலகில் மனிதர்களை படைத்திருப்பதன் பிறதான நோக்கமே மனிதர்களை நோதிப்பதற்காக வேண்டியே. மகிழ்ச்சி, துக்கம், இலாபம், நஷ்டம், வெற்றி, தோல்வி… போன்ற அனைத்தையும் மனித வாழ்வில் அல்லாஹ் கொடுத்து விட்டு மனிதர்களின் நடத்தைகளை கண்காணிக்கிறான். இவ்வனைத்தையும் மாறி மாறி சுழழச் செய்து ஒவ்வாரு கட்டத்தில் அவனுடைய நிலையை சோதிக்கிறான். வாழ்க்கையில் ஒருவனுக்கு பூரணமான சந்தோசமும் இருக்காது அதே நேரத்தில் பூராணமான துக்கமும் இருக்காது. இரண்டையும் வல்லவன் அல்லாஹ் கலவையாக வைத்திருக்கிறான். அதே போன்றுதான் அல்லாஹ் இஸ்லாம் மார்க்கத்தில் பலதை தெட்டத் தெளிவாகவும் சிலதை ஆய்வு, முயற்சியின் பயனாக தெளிவை அடையக் கூடியவைகளாகவும் வைத்திருக்கிறான். இதன் மூலம் ஒவ்வொரு மனிதனுடைய சக்திக்குட்பட்ட முயற்சியையும், ஆய்வையும் சோதிக்கிறான். அதே நேரத்தில் ஒருவன் ஆய்வு, முயற்சியின் பயனாகத்தான் முடிவுகளை எட்டுகிறானா? அல்லது அவர் சொல்லிவிட்டார் இந்த அறிஞர் சொல்லி விட்டார் என்றெல்லாம் குறுட்டு பக்தியினால் முடிவுகளை தன் அறிவுக்கு தாரை வார்க்கிறானா? என்பதையும் அல்லாஹ் சோதிக்கிறான். அதனால்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ஒருவன் ஒரு விடயத்தில் முயற்சி செய்து அவ்விடயத்தில் அவன் சரி கண்டு அல்லாஹ்விடத்தில் அது பிழையாக இருக்குமானால் அவனுக்கு ஒரு கூலி என்றார்கள். இதிலிருந்து அல்லாஹ் முயற்சியை சோதிக்கிறான் என்பதை புரியலாம்.
எனவே கொள்கை சகோதரர்களிடமுள்ள கருத்து முரண்பாடுகளை ”கருத்து முரண்பாடகவே” நோக்கி அதை கொண்டு நமக்கு மத்தியில் பகைமை பாராட்டாமல் ஓரணியில் ஒன்றினைவோம். ஏகத்துவத்தை நிலைநாட்டுவோம். ஷிரக், பிதஅத்துக்களை துடைத்தெறிவோம். எல்லாம் வல்ல அல்லாஹ் நமது உள்ளத்தை சீர்படுத்துவானாக!
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

No comments:
Post a Comment