7 Apr 2015

முகநூலில் முலாம் இடப்பட்டிருக்கும் தனிநபர் தாக்குதல்கள்..




முகநூலில் பரவலாக தனி நபர்களை நோக்கி மட்டுமே தமது விமர்சனங்களை குறிவைக்கும் கீழ்தரமான தஃவா முறையை இயக்க வேறுபாடின்றி அனைவருமே கையிலேந்திருக்கும் ஒரு துரதிஷ்ட நிலையையே காணக்கூடியதாக இருக்கின்றது. இவ்வாறு மாற்றுக் கருத்துடையவர்களை அவர்களின் சில சொந்த வாழ்க்கையை இழுத்து அவர்களின் தனிப்பட்ட குறைகளை அம்பலப்படுத்தும், இஸ்லாம் வெறுக்கின்ற செயற்பாட்டை செய்து வருகின்றனர். போதாக்குறையாக, இதை நியாயப்படுத்த தம்பக்கம் நியாயத்தையும் சுமந்து கொள்கின்றனர், அதாவது "நீங்கள் மட்டும் எல்லை மீறி நமது சொந்த விடயங்களை சந்திக்கு இழுப்பீர்கள்; நாங்கள் பதிலீடாக மட்டும் சொன்னால் அளவு கடந்த விமர்சனம் என்பீர்கள்" என்றொரு நீதி இல்லாத நியாத்தை சொல்கிறார்கள். ஆனால் இஸ்லாம் ஆகுமாக்காத ஒன்றை இவ்வாறு இன்னொருவர் செய்கிறார்கள் என்பதற்காக தாமும் அதை ஆகுமாக்கிக் கொள்வது அறியாமையின் உச்சகட்டமாகும். 


மாறாக ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அம்பலப்படுத்த முடியும். ஒருவரின் தவறான நடத்தை, நடைமுறை, பிழையான போங்கு என்பவைகள் மனிதகுல நன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் என்றிருந்தால், அத்தவறை மனிதகுல நன்மை கருதி  (நாகரீகமாக) பகிரங்கப்படுத்துவதில் எவ்வித குற்றமுமில்லை. பகிரங்கப்படுத்தி மக்கள் மன்றில் உண்மையை உறைப்பது அவசியமும் கூட. ஹதீஸ் கலை துறையில் நபி (ஸல்) அவர்கள் தொடர்புபடாத செய்திகள் மக்கள் மத்தியில் சென்று விடக்கூடாது என்ற மனிதகுல நன்மை கருதி இலட்சக்கணக்கான அறிவிப்பாளர்களின் தனிப்பட்ட சொந்த வாழ்வு விடயங்கள் அலசப்பட்டு மக்கள் மன்றில் பகிரங்கப்படுத்தி இருப்பது இவ்வளவு கோளின் அடிப்படையிலே என்பதை புரிய கடமைப்பட்டுள்ளோம்,
இதை இன்னும் புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தை குறிப்பிடுகிறேன்.

ஒருவர் புகைப்பிடிக்கும் தவறை செய்கிறார். அதே நேரத்தில்  புகைபிடிப்பதை ஆதரிக்கவும் செய்கிறார். ஆதரித்து எழுதுகின்றார் -அல்லது பேசுகிறார். இவரின் இச்செயல் ஒரு சமூகத்தையே பிழையான கோணத்தில் வழி நடத்திச் செல்லத்தூண்டுகிறது என்பதனால், இவரின் இவ்விடயத்தில் இவரை பகிரங்கப்படுத்தி மக்களின் நலன் கறுதி பிரச்சாரம் செய்ய வேண்டும்.  

அதே போன்று, ஒருவர் புகைப்பிடிக்கிறார். ஆனால் அவற்றை அவர் ஆதரிக்கவில்லை. பகிரங்கப்படுத்தவுமில்லை. புகைபிடிக்கும் செயல் அல்லாஹ்வுக்கும் அவருக்கும்தான் தெரியும். இந்த நிலையில் இவரின் மாற்றுக்கருத்துடைய ஒருவர், வழி மீது விழி வைத்தாற் போல் இவரிடத்தில் ஒரேஒரு குறை தென்படாதா? என்று கண்வைத்து இருந்தவருக்கு "அல்வா" கிடைத்தது போல் அவரின் இத்தனிப்பட்ட தவறை அம்பலப்படுத்தி ஊர், உலகமெல்லாம் நாரடித்து விடுகிறார். இந்தப் பிரச்சாரம் இஸ்லாம் வெறுத்த, தடைசெய்த பிரச்சார அணுகுமுறை. இவ்வாறான அழைப்புப் பணி அணுகுமுறைதான் முக நூல் எங்கும் முலாம் இடப்பட்டிருக்கின்றன. 

எனவே,
ஒரு சகோதரின் சொந்த, தனிப்பட்ட, மக்களுக்கு பாதிப்பு இல்லாத, இரகசியமான குற்றங்குறைகளை தேடி ஆராய்ந்து அம்பலப்படுத்தும் தஃவா அணுகுமுறையை இஸ்லாம் காட்டித்தரவில்லை. 

ஸஹீஹுல் புகாரி 2442. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான்.  என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 


இப்டியான அழைப்புப் பணியை தவிர்த்து, இயன்றளவு மாற்றுக்கருத்துள்ளவரை விமர்சிக்கும் போக்கை தவிர்த்து அவரின் வழிகேடான அல்லது பிழையான கருத்துக்களை மட்டும் விமர்சிக்கும் நல்ல தூய்மையான உள்ளம் கொண்டவர்களாக எம்மை நாம் பண்படுத்திக் கொள்வோம். 
இன்ஷா அல்லாஹ்!

No comments:

Post a Comment