26 Apr 2015

தர்காக்களில் தவிடுபொடியாக்கப்படும் இஸ்லாத்தின் அடிப்படைகள்

இஸ்லாத்தின் இறுதித் தூதுத்துவப்பணி நிறைவுற்று 14 நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும் வல்லோன் அல்லாஹ்வால் அதன் அசல்  இன்று வரைக்கும் எவ்வித கலங்கமும், மாறுதலும் இன்றி  பாதுகாக்கப்பட்டுள்ளது. புனித உரைகளான அல்-குர்ஆன்  மற்றும் ஆதரபூர்வமான ஹதீஸ்கள் மூலம் இவைகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. இவ்விரண்டும்தான் அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்ட நேரான வழி. நேரான வழிக்குப் புரம்பாக எடுத்துவைக்கப்படும் ஒவ்வொரு எட்டுக்களும் புரக்கணித்து ஒதுக்கிவிடப்படவேண்டியவை. எனவேதான் நமது ஒவ்வொரு நடைமுறை சார் விடயங்களும் புனித உரைகளில் உரசிப்பார்த்தே நகர்தல், நகர்த்தப்படல் வேண்டும்.


திண்ணமாக, இந்த நல்லுரையை நாம்தாம் இறக்கிவைத்தோம். மேலும், நாமே இதனைப் பாதுகாப்போராகவும் இருக்கின்றோம்.
(அல்குர்ஆன்: 15:9)
நாம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கி விடுங்கள். பிறகு உங்களுக்கு என்னிடமிருந்து நேர்வழி கிடைக்கும்போது யார் எனது நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன்: 2:38)

மேற்குறிப்பிட்ட முன்னுரையை மனதில் ஆழப்பதியவைத்தவர்களாக, இன்று முஸ்லிம்கள் மத்தியில் ‘தர்கா’ என்றழைக்கப்படும், முஸ்லிம் சமுதாயத்தில் வாழ்ந்து மரணித்த மனிதர்களின் அடக்கஸ்தலங்களை கட்டப்பட்டவைகளாக கட்டமைத்து அவர்களின் நினைவாக வருடா வருடம்  (இஸ்லாத்தின் பெயரால்) பல நிகழ்வுளும், நிகழ்ச்சிகளும் இடம்பெற்று வருகின்றன. இந்த 'தர்காக்கள்' தூய இஸ்லாத்தின் புனித உரைகளின் அடிப்படையில்தான் பிரதிபலிக்கின்றதா? என்றால் கிஞ்சித்தும் கிடையவே கிடையாது என்பதனை, அவற்றில் நடைமுறைப்படுத்தப்படும் மார்கத்திற்கு முரணான ஏராளமான அனாச்சாரங்களே மிகச்சிறந்த சான்றாக பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.   

நபிகளாரில் முன்மாதிரி இல்லை

மார்க்கத்தோடு தொடர்பான விடயங்களில் அல்லாஹ்வின் தூதரிடத்தில் முன்மாதிரி இருத்தல் வேண்டும். முன்மாதிரியின்றி அவை நல்லதோ, கெட்டதோ நமது மனதிற்கு தோதுவானது போல் மார்க்க விடயங்களில் நுழைவிப்பது இஸ்லாத்தில் மிகப்பாரதூரமான விடயமாகும்.
நமது மார்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால்  அது நிராகரிக்கப்படும்  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :
ஆயிஷா (ரலி) புகாரி (2697)
மார்கத்தில் புதிதாக உருவாகப்பட்டவைகளை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். புதிதாக உருவாக்கப்பட்டவை அனைத்தும் பித் அத் எனும் அனாச்சாரம்  ஆகும்.ஒவ்வொரு பித் அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும் என்று நபி (ஸல்)எச்சரிக்கை செய்துள்ளார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி )
நூல்: நஸயி :(1560) 
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
(அல்குர்ஆன்: 33:21)

தர்காக்களில் அரங்கேறும் நிகழ்வுகளுக்கு, முன்மாதிரிப் புருஷர் நபி (ஸல்) அவர்களிடத்தில் எவ்வித முன்மாதிரிகளும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போதே உயிர்தியாகம் செய்த பல சஹாபாக்கள் (சஹீத் அந்தஸ்துடன்) அடக்கப்பட்டனர். ஆனால் நபி (ஸல்) அவர்கள் மரணித்த ஒரேயொரு தோழருக்காவது அவர்களின் கப்றுகளை கட்டியெழுப்பி அதனை கொண்டு அவர்களை பிரத்தியோகமாக நினைவுபடுத்தினார்களா? என்றால் வரலாறில் மெல்லிய கீரலேனும் இதற்கு சான்று கிடையாது. ஈமானில் நம் அனைவரையும் விட மிஞ்சிய சஹாபாக்களுக்கே தர்காக்கள் இல்லை எனும் போது, தர்காக்களில் அடங்கப்பட்டிருக்கும் மகான்கள், நாதாக்கள், ஒலிஉல்லாக்கள் என்போர்கள் எம்மாத்திரம்? என்பதை சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

முன்மாதிரியின்மையே தர்காக்களை வேரோடு பிடிங்கி எறியவதற்கு போதுமானது. மட்டுமல்லாமல் 1400 வருடங்களுக்கு முன்பாகவே நபி (ஸல்) அவர்களின் தெளிவான வார்த்தைகளால் தர்காவை பட்டவர்த்தனமாக ஐயத்திற்கிடமின்றி எச்சரிக்கை செய்துவிட்டார்கள்.

இணைவைப்பு பளிச்சிடுகிறது

இஸ்லாம், பாவங்களிலே அல்லாஹ்வால் (மறுமையில்) மன்னிக்கப்படாத பாவமாக இணைவைத்தலை அடையாளப்படுத்துகிறது. இப்பாவம் நம்மை நிரந்தரமாகவே நரகத்திற்கு தள்ளிவிடக் கூடியது.
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.
(அல்குர்ஆன் 4:48)

தர்காக்களில் இணைவைப்பு அராஜகம் சர்வசாதாரணமாகவே அரங்கேறுகிறது. "வணங்குவதும், வழிபடுவதும், உதவி தேடி அழைப்பதும் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறுயாருமில்லை" என்பதுவே ஒரு முஸ்லிமின் இறைகோட்பாட்டுக் கொள்கையாகும்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
(அல் குர் ஆன் 1:5)

ஆனால் தர்காக்களில் அடக்கப்பட்ட மனிதரிடத்தில் அழைத்துப் பிரார்திக்கும் காட்சியானது இஸ்லாத்தின் உன்னத இறைக்கோட்பாட்டையே கேள்விக்குறியதாக்கி, கேலிக்குறியதாக்கும் மகாபாதக செயலாகும். இது அப்பட்டமான இணைவைப்பு என்பதில் எள்ளின் முளையளவும் சந்தேகம் கிடையாது.

சமூகத்தில் இணைவைப்புச் சாயல் இவ்வாறான வடிவத்திலும் கூட விழுந்து விடக்கூடாது என்பதற்காகவே நபி (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையிலும் சமாதி வழிபாட்டை எச்சரிக்கை செய்து விட்டுச்சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் இதன் பாரதூரத்தை எவ்வளவு தூரம் பயந்துள்ளார்கள்? என்பதை இச்செய்திகள் சான்றுபகர்கின்றன.
தங்கள் நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
(புகாரி 436)

அல்லாஹ்விடம் மாத்திரமே அழைத்துப் பிரார்திக்க வேண்டிய முஸ்லிம்கள் அற்பத்திலும் அற்ப அல்லாஹ்வின் படைப்புகளிடம் தமது தேவைகளை கேட்பது அல்லாஹ்வை அவர்களுடன் கூட்டுச் சேர்பதேயாகும். அல்லாஹ்விடத்தில் இதன் விளைவுகள் படு பயங்கரமானவை என்பதை ஆழ் மனதில் பதியக் கடமைப்பட்டுள்ளோம்.

தர்காக்களில் அடக்கப்பட்டவர்களிடம் அழைத்துப்பிரார்திப்பது மட்டுமல்லாமல் அறுத்துப் பழியிடுதல், நேர்ச்சை செய்தல் போன்ற ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே செய்ய வேண்டிய வணக்கங்களையும் அவர்களுக்காக சர்வசாதாரணமாக செய்து வருகின்றனர்.

இவ்வாறு தர்காக்களுக்குச் சென்று, வணக்கங்களில் அல்லாஹ்வுடன் மற்றவர்களையும் கூட்டுச்சேர்த்து வெள்ளிடை மலையாக பளிச்சிடும் இவ்விணைவைப்புக் காரியங்களை உயிர்ப்பிக்கும் மக்கள், அல்லாஹ்வின் மிகப்பயங்கரமான தண்டனையை பயந்து கொள்ளவேண்டும்.

கப்றுகளை கட்டுதல், பூசுதல்

இன்று தர்காக்களில் கப்றுகளை நிலத்திலிருந்து உயர்த்தி கட்டப்பட்டு, அதைப் பூசி மினுமினுப்பான பச்சை நிற போர்வைகள் போர்த்தி, பக்கத்தில் சந்தனக் குச்சிகள் எறியவிடப்பட்டு பக்திப் பரவசத்தோடு காட்சி தருவதை காண்கிறோம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் இந்த நடைமுறைகளை  தெட்டத் தெளிவான வார்த்தைகளால் முளையிலே கிள்ளி எரிந்துள்ளார்கள்.
கப்ருகள் கட்டப்படுவதையும், பூசப்படுவதையும், அதன் மீது உட்காருவதையும் நபி (ஸல்)அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பாளர் : ஜாபிர்(ரலி), நூல்கள் : அஹ்மது, முஸ்லிம்,நஸயீ, அபூதாவூத், திர்மிதி.

அடக்கஸ்தலங்களை விழா கொண்டாட்டத்திற்குறியதாக மாற்றுதல்

தர்காக்களில் அடங்கப்பட்டிருக்கும் மனிதரின் நினைவாக சிறப்பு விழாக்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. மரணித்த குறித்த மனிதரின் பெயரில் கந்தூரி சாப்பாடு பரிமாரல், அவருக்காக அறுத்துப் பழியிடுதல், குர்ஆன் பாராயனம் செய்தல் போன்ற நிகழ்சி நிரல்கள் தர்காக்களில் விழா கோளமிடுவதை காணலாம்.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு சிலநாட்களே எஞ்சியுள்ள நிலையில் மக்களை அழைத்து ஒரு உபதேசம் செய்தார்கள். அதாவது நான் மரணித்தற்குப் பின்னால் எனது அடக்கஸ்தலத்தை விழாகொண்டாடும் இடமாக மாற்றி விடாதீர்கள் என்று முன்கூட்டியே எச்சரிக்கை செய்து விட்டுச் சென்றுள்ளார்கள்.
‘எனது கப்றை விழா கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள்’ என தாம் மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் எச்செரித்துள்ளார்கள். (அறிவிப்பாளர்  அபுஹுரைரா(ரலி),
ஆதாரம்:அஹ்மத்,அபூதாவூது

இத்தகைய தெளிவான எச்சரிக்கையும் மீறி தர்காக்களை போஷித்துக்கொண்டிருப்பசர்கள் ஒரு கணம் தமது மனதைத் தொட்டு கேட்டுப்பாருங்கள்....

புனிதம் கருதி பயணித்தல்

தர்காக்களில் அடக்கப்பட்ட மனிதர்களின் கப்ருகளை மக்கள் புனிதமாக நினைத்தே அவ்விடம் படையெடுக்கின்றார்கள். நாட்டின் நாலாபுறங்களிலும் உள்ள மக்கள் அவ்விடம் நோக்கி நகர்த்தப்படுகிறார்கள் என்றால் புனிதம் என்ற ஒன்றை தவிர வேறில்லை என்பதுவே நிதர்சனம். இந்தியாவின் நாகூர் தர்கா போன்றவற்றிற்கு வெளிநாட்டிலிந்து கூட மக்கள் யாத்திரிகைகளாக செல்கிறார்கள் என்பதை கண்கூடாகக் காண்கிறோம். ஆனால் இஸ்லாம் 3 இடங்களைத் தவிற இவ்வாறு புனிதம் கருதி செல்வதை தடைசெய்திருக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், மஸ்ஜிதுல் ஹராம் மஸ்ஜிதுந் நபவீ மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று இடங்களை தவிர வேறெந்த இடத்திற்கும் (புனிதத்தை முன்னிட்டு) பயணம் மேற்கொள்ளதீர்கள்.
(புகாரி 1189)

தர்காக்களுக்கும் புனித இஸ்லாத்திற்கும் கடுகளவேனும் சம்பந்தம் இல்லை என்பதை மேற்குறித்த செய்திகள் சற்றுமே சஞ்ஞலத்திற்கு அப்பாற்பாட்டு தெளிவுபடுத்துகின்றன. இதனைப் புரிந்தோ புரியாமலோ மக்கள் அதன் பக்கம் நாடக்கூடியவர்களாக இருந்து வருகின்றனர். அம்மக்கள் நிரந்தர நரகத்திற்கு இட்டுச்செல்லும் தர்கா வழிபாட்டை துடைத்தெரிந்து விட்டு மறுமை வெற்றிக்கான ஏகத்துவ கொள்கையின்பால் அன்பாக அழைக்கிறோம்.
(முழுக்க முழுக்கத்) தெளிவான அறிவுரைகள் உங்களுக்கு வந்த பின்னரும் நீங்கள் வழி பிறழ்ந்து போவீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் வல்லமையுடையோன்; நுண்ணறிவுள்ளோன் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன்: 2:209)



No comments:

Post a Comment