போலி மக்கள் நலன்களை கொக்கரிக்கும் முகமூடிகள்
இலங்கை திரு நாட்டில் கடந்த காலங்களில் சமாதானத்திற்கும், சகவாழ்விற்கும் பெறும் அச்சுறுத்தலாக செயற்பட்டு வந்த பௌத்த கடும்போக்கு அமைப்பான பொது பல சேனா, கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் மூக்குடைப்பட்டு அடையாளம் தெரியாமல் துடைத்தெறியப்பட்டிருக்கின்ற நிலையில், தற்சமயம் தமது போலி வேதவாக்கை வேக வைக்கும் பாத்திரமாக சிங்கள ராவய எனும் அமைப்பை களத்தில் இறக்கி விட்டிருக்கிறது போலும்.
கடந்த தமிழ்-சிங்கள புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் முஸ்லிம்கள் உட்பட பல இனத்தவர்களும் நுவரெலியா நோக்கிப் படையெடுத்திருந்தனர். புத்தாண்டு தினத்திற்கு அடுத்த தினமான அதாவது ஏப்ரல் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை. முஸ்லிம்கள் தமது ஜும்ஆ கடமையை நிறைவேற்றுவதற்காக நுவரெலியா - கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள 'நுவரெலியா கபீர் ஜும்ஆ' பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர். சுற்றுலா நிமித்தம் கணிசமான மக்கள் வருகை தந்திருந்தமையினால் பள்ளியின் உட்புறத்தில் மக்கள் நிரம்பி வழிய எஞ்சிய மக்கள் நுவரெலியா - கொழும்பு பிரதான வீதியில் தொழ வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகி அவ்விடத்தில் தொழுகையில் ஈடுபட்டனர். இதனால் கிட்டத்தட்ட 10-15 நிமிடங்கள் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதன் எதிரொலியாக இச்சம்பவத்தை லாபகமாக கவ்விக் கொண்ட
பௌத்த கடும்போக்கு அமைப்புக்கள் முகமூடியை மாட்டிக்கொண்டுள்ளனர். அவ்வமைப்புக்கள் கடந்த 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிருலப்பணையில் அமைந்துள்ள பௌத்த மத்திய நிலையத்தில் செய்தியாளர் மநாடொன்றை ஏற்பாடு செய்தனர். சம்பவம் குறித்து சிங்கள ராவயவின் செயலாளர் மாகல் கந்தே சுதந்த தேரர் போலி மக்கள் நல அக்கரையை அகல வாயில் கொக்கரித்தார். குறித்த சம்பவத்தின் பிண்ணனி, யதார்த்தம், தூரனோக்கு, ஜனநாயக புரிந்துணர்வு போன்ற எந்தவொரு அடிப்படையுமற்ற அவரின் அனாமோதய கருத்துக்கள், தாம் இந்த நாட்டின் பல்லினங்களுக்கு மத்தியில் சகவாழ்வையும், சமாதானத்தையும் வேறறுக்கும் கடும்போக்காளர்கள்தான், என்பதை வெள்ளிடை மலையாக நிரூபித்திருக்கிறது.
சவாலா? நிர்பந்தமா?
செய்தியாளர் மாநாட்டில் பேசிய சிங்கள ராவயவின் செயலாளர், 'நாங்களும் அடுத்த வருடம் தமிழ் - சிங்கள புத்தாண்டு தினத்தன்று நுவரெலியாவுக்குச் செல்வோம். கொழும்பு - நுவரெலியா வீதியை மறித்து சமய வழிபாடுகளைச் செய்து, பிரித் ஓதுவோம்' என்று ஒரு சவாலை முன்வைத்தார். ஓர் சம்பவத்தை அதன் காரணி, பின்ணனி அறியாமல் அல்லது அறிந்தும் முழுப் பூசணிக்காயையும் சோற்றில் மறைத்து தமது விஷக் கொள்கையை திணிப்பதற்காக, சம்பவத்தை பூதாகரமாக்கி சட்டவொழுங்கை கலங்கப்படுத்தி, கலவரத்தை தூண்டக்கூடிய, இத்தகைய அலப்பறைகள் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியவை.
முஸ்லிம்கள் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வேண்டுமென்றே அசௌகரியத்தை ஏற்படுத்தவே பாதையை மறித்து கடமையை நிறைவேற்றினார்களா? அல்லது பள்ளியின் உட்புறத்தில் இடப்பற்றாக்குறை காரணாமாக நிர்பந்த சூழல் அவர்களை பாதைக்கு வரவழைத்ததா? என்றால், நிச்சயமாக மறுக்க முடியாத யதார்த்தம், பள்ளியின் உட்புறத்தில் தொழுவதற்கான போதுமான இடமில்லை என்பதே தெளிவு. இதனை நன்கு அறிந்தும் 'முஸ்லிம்கள் தான்தோன்றித்தனமாக பாதையை மறித்து மக்கள் போக்குவரத்திற்கு இடையூறு செய்தார்கள்' என்ற விஷத்தை மக்கள் மனதில் விதைத்திருக்கின்றனர். 'நாமும் அடுத்த வருட புதுவருடத்தில் பாதையை மறித்து பிரித் ஓதுவோம்' என்று நிர்பந்த சூழலில் நிகழ்ந்தவொன்றை வீணாக சவாலுக்குறியதாக்கி, சம்பவத்தை முனைந்து தவறாக சித்தரித்து, மக்கள் மனங்களில் இனமுறுகளையும், கசப்புணர்வையும் தோற்றுவிக்க எடுக்கப்பட்ட தீவிர பிரயத்தணத்தின் வெளிப்பாடே இக்ககருத்துகள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எதற்கு சவால் விட வேண்டும்? என்றவொரு குறைந்தபட்ச அறிவுத் தெளிவு கூட அற்ற இவர்களின் வங்குரோத்து வாய்சவடால்கள் இம்மியளவும் தாக்கம் செலுத்தப் போவதில்லை. நடுனிலையோடு சிந்திப்பவர் நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.
பொலிஸ் அனுமதி பெறப்பட்டதா?
மேலும் தமது முஸ்லிம் விரோதத் தீயை மூட்டி உச்சி குளிர்வதற்கு ஊகத்தின் அடிப்படையிலான ஓர் கருத்தையும் காமல் கந்தே சுமந்த தேரர் இவ்வாறு முன்வைத்திருந்தார். 'மக்கள் போக்குவரத்திற்கு உள்ள பாதைகளை மறித்து ஏதும் நிகழ்வுகள் மேற்கொள்வதாக இருந்தால் அதுபற்றி பிரதேச பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இத்தகைய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமலே முஸ்லிம்கள் நடுவீதியில் சமயக் கிரீகைகளை நிறைவேற்றியுள்ளனர்'
செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்துவதற்கு முன்னர் குறித்த விடயம் குறித்து போதுமான ஆதரங்களையும், தகவல்களையும், வாக்குமூலங்களையும் சேகரித்தே கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும். ஆனால் எவ்வித துணை ஆதாரங்களும் ஏற்கத்தகுந்த முறையான எந்தவொரு தகவல்களும் இன்றி 'பொலிஸ் அனுமதி பெறப்படவில்லை' என்று உண்மைக்கு புறம்பான கருத்தை பதிவு செய்திருப்பது வடிக்கட்டிய கயமத்தனமாகும். இந்த விவகாரம் குறித்து நுவரெலியா கபீர் ஜும்ஆப் பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவர் மொஹமட் சனூன் அவர்கள் 'அதிகளவான முஸ்லிம்கள் வருகை தருவார்கள் என்ற கணிப்பில் சட்ட ரீதியில் முன்கூட்டியே பொலிஸில் அனுமதி பெற்றிருந்தோம்' என்று தனது கூற்றை தெளிவாக பதிவு செய்திருந்தார். எனவேதான் மாகல் கந்தே சுமந்த தேரர் சொல்வது போல் 'பொலிஸாரும் முஸ்லிம்களின் இந்த நடவடிக்கைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; அவர்கள் ஒளிந்து கொண்டார்கள்' என்பதிலிருந்து, சட்ட ரீதியில் முன்கூட்டியே பொலிஸ் அனுமதி பெறப்பட்டிருப்பதை பொலிஸாரின் மௌனம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இதிலிருந்து இந்த நிகழ்வு சட்டத்தை மீறிய குற்றம் என்ற அவரின் வீண் குற்றச்சாட்டு குட்டுப் பட்டு வழுவிழக்கப்பட்டிருக்கிறது.
சட்டவொழுங்கை மீறியவர்கள் யார்?
சட்ட ரீதியில் முன்கூட்டியே அனுமதி பெறப்பட்டு, வெறும் 10-15 நிமிடங்கள் மாத்திரம் நிர்பந்த நிமித்தம் பாதையை மறித்து சமயக் கடமையை நிறைவேற்றியமைக்காக, சட்டவொழுங்கை மீறிய மகாபாதக குற்றம் என திருவாய்த் திறக்கும் உத்தமர்கள், தமது வரலாற்றுச் சுவடுகளை சற்று பின்னோக்கி நகர்த்திப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளனர்.
2011 செப்டம்பர் 10 :
அனுராதபுரம் ஒட்டுப்பள்ளம் தர்கா, பௌத்த கடும்போக்காளர்களால் பலவந்தமாக உடைக்கப்பட்டது.
2012 ஜூலை 29 :
ராஜகிரிய ஒபேசேகரபுரவில் அமைந்துள்ள தாருள் ஈமான் பள்ளிவாசளுக்கு முன்பாக பிக்குகள் தொழுகைக்கு இடையூறு விளைவித்து கோஷங்களை எழுப்பினர்.
2012 ஆகஸ்ட் 30 :
மஃரிப் தொழுகைக்குப் பின் கொகிலவத்தை பள்ளிக்குள் மதுபோதையில் சிங்கள இளைஞர்கள் நுழைந்து அட்டாகாசம் புரிந்தனர்.
2012 ஏப்ரல் 20 :
தம்புள்ளையில் அமைந்துள்ள ஹைரியா ஜும் ஆப் பள்ளிவாசல் கடும்போக்கு பௌத்த அமைப்புக்களின் தலைமையில் பலவந்தமாக தாக்கப்பட்டது. சுமார் 500 பேரளவில் இனவாத சுலோகங்களுடன் பேரணியாக வந்து ஜனநாயக மத சுதந்திர உரிமையோடு சமய கடமைகளுக்காக நிர்மாணித்திருந்த முஸ்லிம்களின் இறை இல்லத்தை சுற்றி வளைத்து குர்ஆன் பிரதிகள் உட்பட கட்டிடத்திற்கும் சேதம் விளைவித்தனர்.
2014 ஏப்ரல் 9 :
கொம்பனித்தெருவில் அமைந்துள்ள நிப்போன் ஹோட்டலில் ஜனநாயக முறைப்படி ஜாதிக பல சேனா எனும் அமைப்பினால் செய்தியாளர் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பலவந்தமாக நுழைந்த பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் செய்தியாளர் மாநாட்டை குழப்பி அதற்கு இடையூறு விளைவித்து நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினார். வட்டரக்க விஜித தேரரை அதிகாரத் தொணியில் கடுமையாக அச்சுறுத்தினார். பின்னர் வெளியில் வந்து செய்தியாளர்களிடம் புனித அல் குர்ஆனை நிந்தனை செய்தும் பேசினார்.
2014 ஏப்ரல் 23 :
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள கைத்தொழிழ் அமைச்சுக் காரியாலயத்தை பொது பல சேனா அமைப்பு அங்கத்தவர்கள் சுற்றி வளைத்து பலவந்தமாக உள்ளே நுழைந்தனர். ஜாதிக பல சேனாவின் பொதுச் செயலாளர் வட்டரக்க விஜித தேரர் அங்கு ஒளிந்துள்ளதாக கூறியே பாதுகாப்பு தரப்பினரின் தடையையும் மீறி பலாத்காரமாக சட்டத்தை கையிலெடுத்து உள்ளே நுழைந்து அடாவடித் தனத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பில் அமைச்சரினால் பொது பல சேனாவிற்கு எதிராக வழக்குத் தாக்கலும் செய்யப்பட்டது.
2014 ஜூன் 15 :
அளுத்கமையில் தனிப்பட்ட இரு சாராருக்கு இடையில் நடந்த முறுகள் நிலையை பயன்படுத்தி, பொது பல சேனா அமைப்பின் தலைமையில் எதிர்த்து ஆர்பாட்டம் என்ற பெயரில் இனக்கலவரத்தை தூண்டிவிட்டது. ஆர்பாட்டத்தில் பொது பல சேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெளிவாகவே இனக்கலவரத்தை தூண்டும் விதமாக ஆக்ரோஷமாக இனத்துவேச வார்த்தைகளை வெளிப்படுத்தியிருந்தார். பின்னர் ஏற்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் 3 அப்பாவி முஸ்லிம்கள் உயிரிழந்ததுடன், முஸ்லிம்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டும் சூரையாடவும்பட்டன.
2016 ஜனவரி 25 :
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை மன்றில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எகனலிகொடவை (பிரகீத் எக்னலி கொடவின் மனைவி) பொதுபல சேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் அச்சுறுத்தினார். நீதிமன்ற செயற்பாடுகளையும் அவமதித்தார். இது தொடர்பாக அவர் கைதும் செய்யப்பட்டார்.
2016 ஜனவரி 26 :
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்தில் கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசாரவை விடுதலை செய்யுமாறு கோரி, பௌத்த கடும்போக்கு அமைப்புக்கள் சட்டவொழுங்கையும் மீறி நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாகவே போராட்டம் செய்தனர். சிறைச்சாலை வாகனத்தை நகரவிடாமல் வாகனத்தின் சில்லுக்கு கீழ் படுத்த வண்ணம் பிக்குமார்கள் சட்டத்தை ம(மி)தித்தனர். நீதிமன்ற நுழைவாயில் மூட்ப்பட்டிருந்தமையால் மதில் வழியே குதித்து தம்மையும் கைது செய்யுமாறு கொந்தளித்தனர்.
இவ்வாறு வரலாற்றிலும், நிதர்சனத்திலும் சட்டத்தையும், சட்டவொழுங்கையும் கண்டம் துண்டமாக, குத்திக் குதறி கடும்போக்கை விதைக்கின்றவர்களே இந்த முகமூடிகள். ஆனால் இவர்களுக்கு தமது உரிமை கோரிக்கைப் போராட்டத்திலும் கூட காவல் துறையினருக்கு வேலை கொடுக்காமல் சட்டத்தை கடமையுணர்வுடன் மதித்த சீரிய வரலாற்றைக் கொண்ட முஸ்லிம் சமுதாயத்தை நோக்கி சம்பந்தமேயில்லாமல் சகட்டுமேணிக்கு விமர்சிப்பதற்கு கிஞ்சித்தும் அருகதையில்லை.
மலத்தை தலையில் சுமந்து கொண்டு தூய்மையோடு இருப்பவனை பார்த்து அசுத்தமானவன் என்று சொல்வது எத்தகைய வேடிக்கையானதோர் செயலோ அதையும் மிஞ்சிய ஓர் வேடிக்கையே நுவரெலியா பிரதான வீதியில் முஸ்லிம்கள் தொழுதமையை சட்டத்தை மீறிய குற்றம் என்று கூக்குரல் இட்டமை.
எது எப்படியோ இனவாதம் பேசுபவர்களின் சாயம் வெளுத்துக் கொண்டே இருப்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.
இறைவனுக்கே புகழ் அனைத்தும்!
No comments:
Post a Comment