13 Mar 2014

இஸ்லாத்தில் இணங்களுக்கு இடையிலான நல்லிணக்கம்

நம் இலங்கைத் திருநாட்டில் கறை படிந்த வரலாறாக இரு இனங்களுக்கு இடையில் நடைபெற்ற 30 வருட கால  இமாலய யுத்தம், முற்றுப்பெற்று 5 வருடங்கள் பூர்த்தியாகி விட்டன.  அதன் சுதந்திரக் காற்றை மக்கள் சுவாசித்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே, யுத்த ரகணங்கள் ஆறுவதற்கு முன்னமே, மீளவும்  இன்னொரு சிறுபான்மை இனத்தை நோக்கிய சமிஞ்சைகள் ஒளிர்விட ஆறம்பித்திருக்கின்றன. 30 வருட கால யுத்தத்தின் பிறதான ஆறம்ப கர்த்தா, பெருபான்மை என்ற ஒரே காரணத்திற்காக சிறுபான்மைக்கு எதிராக சட்டத்தை கையில் எடுத்து அடக்குமுறைக்கு உள்ளாக்கியதே வரலாறு சொல்லும் சாட்சியாகும்.  அதே அணுகுமுறை இன்று சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராகவும் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கின்றது. இதன் பிண்ணனியில் செயற்படும் அரக்கர்களின் பிரதான நோக்கம், வரலாற்றில் தமிழினம் ஆயுதம் தூக்கியது போல் முஸ்லிம்களும் ஆயுதம் துக்க வேண்டும். ஆயுதத்தைக் கொண்டு நமக்கு எதிராக களம் காணுவார்களாயின், இதன் எதிரெலியாகவே அரச துணை கொண்டு அவர்களை ஒடுக்கி விடலாம் என்பதுவே அவர்களின் தாரகமந்திரம். இதனைத்தான் கடந்தகால யுத்தம் படம்பிடித்துக் காட்டுகின்றது. 


உண்மையில் தற்போதயை இலங்கை சூழ்நிலைகளை நோக்கினால், இனவாத பிண்னனியில் செயற்படுகின்றவர்கள் வரலாறு நெடுகிலும் தோன்றி மறைவது போன்று ஒரு சில விஷமிகளே செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அரசியல் இலாபம், ஆட்சி, பதவி, அந்தஸ்து என்று குறுகிய நோக்கங்களுக்காக இனவாதத்தைக் கக்கி இனங்களை கூறு போட முனைகின்றனர். ஆனல் பரவலான நாட்டு நடப்புகளை பொறுத்தவரையில் பெருவாரியான பெருபான்மை மக்கள் இவர்களை அங்கீகரிப்பதில்லை. மட்டுமல்லாமல் நடுநிலை சிந்தனையுடைய பொருபான்மை அரசியல் தலைவர்கள் மற்றும் மாற்றுமத குருமார்கள் கூட இவர்களை சிறிதளவேனும் ஆதரிக்கவில்லை. கூடவே அவர்களுக்கு எதிராக துணிந்து பேசக்கூடியவர்களாகவும் போராடக்கூடியவர்களாவும் இருந்து கொண்டிருக்கிறார்கள். இதனடிப்படையில் இனவாதத்தை பரப்புகின்றவர்களின் மனித பலம் என்பது மிக பலவீனமே! எனவேதான் முஸ்லிம்களாகிய நாம் இச்சந்தர்ப்பத்தில் மிக நிதானமாக செயற்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வெறுமனே உணர்ச்சியின் ஊற்றுக்களால் வசப்பட்டு முடிவுகளை முனைந்து எடுப்பதனால் சிறந்த பிரதிபலன்களை எட்ட முடியாது. நமக்கு சாதகமாக செயற்படுபவர்களையும் எதிரிகளாக்கும் அதாவது உயரப்பார்த்து உமிழ்ந்துக்கொள்ளும் எந்தொவொரு அசாதாரண முடிவையும் எடுத்துவிடக் கூடாது. இவற்றறைத்தான் கடந்த கால யுத்த வரலாறு நமக்கு சிறந்த படிப்பினையாக ஊட்டிக்கொண்டிருக்கின்றது. 

மேற்சொன்ன முன்னுரையை ஆழப்பதிந்து கொண்டு, இனவாத கருத்துக்களும், தாக்குதல்களும் அன்றாடம் அலைமோதுகின்ற இக்காலகட்டத்தில் இதற்கு மிகச்சிறந்த பதிலீட்டு நடவடிக்கைகளை ஆராய்வோமேயானால், முதலாவதாக இனவாத்திற்கு எதிராக இலங்கை அரசியல் சாசனத்திற்கமைய சட்ட நடவடிக்கைகளை துணிந்து மேற்கொள்ள கடைமைப்பட்டுள்ளோம். இரண்டாவதாக குறிப்பாக இனவாத வலையில் பெருவாரியான நடுநிலை பெருபான்மை மக்கள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்குண்டான நமது நகர்வுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு இஸ்லாம் காட்டித்தந்த மிகச்சிறந்த அருமருந்துதான் ”இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம்” என்ற சகவாழ்வும் சமாதானமுமாகும்.  இன்றைய காலசூழ்நிலையில் முஸ்லிமகளாகிய நாமனைவரும் சேர்ந்து பற்றிப்பிடிக்க வேண்டிய அத்தியவசிய பண்புகளில் ஒன்றுதான் இந்த ”இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம்”. 

இஸ்லாம் நல்லிணக்கத்தை அடிப்படையிலேயே சொல்கின்றது. அதாவது ஒட்டு மொத்த மனிதர்களும் ஒரு தாய், தந்தைகளிடமிருந்து பிறந்தவர்கள்தாம் என்று நல்லிணக்கத்துக்கான அஸ்திவாரத்தை பலமாக இட்டுவைத்திருக்கிறது. 

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (அல் குர்ஆன் 4:1)

மேலும் மனிதர்களிடத்தில் காணப்படுகின்ற இனம், மொழி, நிறம், கோத்திரம், நாடு போன்ற வேறுபாடுகள் காணப்படுவதெல்லாம் ஒருவரை ஒருவர் அறிந்து, புரிந்து கொள்வதற்காக வேண்டித்தான். என்றொரு அறிவுரீதியான தத்துவத்தைக் கொண்டு மனிதநேயத்தையும், மனிதர்களுக்கு இடையிலான நல்லினக்கத்தையும் இஸ்லாம் கோடிட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றது.  சுருங்கச் சொல்லப் போனால் அனைவரும் மனிதப்பிறவிகள் என்ற ஒருமைப்பாட்டுடன் நல்லிணக்கத்தை ஆழமாக வழியுறுத்துகிறது. 

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (அல் குர்ஆன் 49:13)

மாற்று மதத்தவர்களாக இருந்தாலும் மனிதர் என்ற வகையிலும் ஒரு ஆண்மாவில் இருந்து பிறந்தவர்கள் என்ற வகையிலும் கண்ணியம் கொடுக்கச் சொல்கிறது இஸ்லாம். அவர்களும் மனிதர்கள்தாம். நமக்கு உண்டான அனைத்து ஆசாபாசங்களும், விருப்பு வெறுப்புக்களும் அவர்களிடமும் சடையாமல் காணப்படுகின்ற குணாதிசயங்கள்தான்; என்ற நல்லிணக்க அடிப்படைகளை இஸ்லாம் கற்றுத்தருகின்றது.  அல்லாஹ்வின் துதர் (ஸல்) அவர்கள் இனநல்லினக்கத்திற்கு மிகச்சிறந்த உதாரண புருஷனாக மிளிர்ந்து விட்டுச் சென்றுள்ளார்கள். அவரின் இக்குணதிசயத்திற்கு சான்றுபகரும் விதமாக பின்வரும் செய்திகள் அழுத்தி நிற்கின்றன.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு கிராமவாசி பள்ளிவாசலினுள் சிறுநீர் கழித்தார். அவரை நோக்கிச் சிலர் (வேகத்துடன்) எழுந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அவர் சிறுநீர்கழிப்பதை) இடை மறிக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். அவர் சிறுநீர் கழித்து முடித்ததும் ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அதைச்சிறுநீர் மீது ஊற்றினார்கள். புஹாரி 478. 

ஒரு ஜனாஸா எங்களைக் கடந்து சென்றது. உடனே நபி(ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் எழுந்து நின்றோம். பின்பு நாங்கள் 'இறைத்தூதர் அவர்களே! இது ஒரு யூதனின் ஜனாஸா" என்றோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்" எனக் கூறினார்கள். அறிவிப்பவர் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) (நூல்கள் - புகாரி 1311, 1312, முஸ்லிம் 1751, நஸயீ, அபூதாவூத், அஹ்மத்)
இவை மட்டுமல்லாமல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வின் பல சந்தர்ப்பங்களிலும் இன நல்லிணக்கத்துக்கான வாசல் கதவுகளை திறந்து விட்டேச் சென்றுள்ளார்கள். கிறிஸ்தவர்களான நஜ்ரான் பிரதேசத் தூதுக் குழுவை நபியவர்கள் மஸ்ஜி;துன் நபவியில் வைத்து வரவேற்று கௌரவித்தமை, அவர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டமை, நியாயமற்ற முறையில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு யூதனை அல்லாஹ் நிரபராதி எனக்; கூறி அல்- குர்ஆன் வசனங்களை இறக்கியமை என இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் பிற சமயத்தவர்களுடனான நல்லுறவிற்கு பல சான்றுகளை அடுக்கடுக்காகக் காணலாம். இவ்வாறு இஸ்லாம் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை கட்டிப் பாதுகாக்கின்றது. இஸ்லாம், அன்றிலிருந்து இன்றுவரைக்கும் பெரும்பாலும் மார்க்கப் பிரச்சாரங்களின் மூலமாக மட்டுமன்றி,  முஸ்லிம்களின் மற்ற இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைக் கொண்டும், அற்புதமான அழகிய பண்புகளை கொண்டும்தான் வளர்ச்சிபெற்றிருக்கின்றது. நல்லிணக்கத்துடன் அனைத்து இனங்களுடனும் சமாதானமாக வாழும் பொழுது, இஸ்லாத்தின் போதனைகள் மாற்றுமதத்தவர்களின் இதயங்களில் ஆழப்பதிவதற்கான அதிக வாய்பிருக்கின்றன. நடைமுறை ரீதியிலான அழைப்பு பணி நல்லிணக்கத்தின் மூலமே சாத்தியப்படும் என்பதையும் நாம் கவனத்திற் கொள்ளவேண்டும். 

எனவே! நாம் நமது இலங்கை நாட்டை பொறுத்தவரை பல்வேறுபட்ட இனங்களுக்கு மத்தியில் வாழ்கின்ற சூழ்நிலையில், இஸ்லாம் போதித்துள்ள இவ்வினங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை நாளும் நடைமுறைப்படுத்துவதோடு இன்னொன்றையும் நாம் ஆழ்மனதில் பதிந்து கொள்ள வேண்டும். அதாவது இஸ்லாம் இன நல்லிணக்கத்தை வழியுருத்துகின்றதே தவிர மதரீதியான மதநல்லிணக்கத்தை கிஞ்சிற்றும் அனுமதிக்கவில்லை. 

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம். (அல் குர் ஆன் 109:06)

இந்த (மத நல்லிணக்கம்) வாசலை இஸ்லாம் ஒரு போதும் திறந்து கொடுக்கவில்லை. திறந்து விட்டிருந்தால் ”எம்மதமும் சம்மதம்” என்ற ஒரு தவறான கொள்கையை நோக்கி நமது பாதங்கள் நகர வேண்டிய நிர்பந்தம் ஏற்படுத்தப்பட்டு விடும். அதே நேரத்தில் இவ்வாறு மார்க்க கொள்கை விடயத்தில் இஸ்லாம் ஒரு இருக்கமான நிலையில் இருப்பதனால் இனநல்லிணக்கத்தில் விரிசல்கள், வெடிப்புகள் ஏற்படுமா? என்றால் சிறதளவேனும் அவற்றிக்கு வாய்பே இல்லை. நபி (ஸல்) அவர்கள் தற்போது நமது நாட்டு சூழ்நிலை போன்றுதான் அதாவது பெரும்பான்மையில் சிறுபான்மையினராக இருந்தார்கள். அந்த சூழ்நிலைகளில் கூட நபி (ஸல்) அவர்கள் மார்க்கத்தை தாரைவார்க்கவில்லை. மார்க்கத்தில் உறுதியாக அசைந்து கொடுக்காமல் இருந்ததோடு மட்டுமல்லாமல் மேற்சொன்ன அனைத்து இனநல்லிணக்கத்திலும் ஈடுபட்டார்கள். அவற்றை மக்களுக்கு போதித்தார்கள். 

எனவே! இலங்கை முஸ்லிம்களாகிய நாம், கலந்து வாழ்கின்ற பொழுது கரைந்து விடாமல் இனநல்லிணக்கத்தை ஏத்திடுவோம். மார்க்கத்தை நிலைநாட்டிடுவோம். 

அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

MK YASIR



No comments:

Post a Comment