23 May 2021

பொது எதிரி...

 

பொது எதிரியை எப்படி கைகோர்த்து வலிமையாக கையாள வேண்டும் என்பதை முஸ்லிம் சமூகம் இன்னும் உணரவில்லை. உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் சரி இதற்கு விதிவிலக்கில்லை என்று சொல்லுமளவிற்கு சிந்தனை வரட்சி பொதுமைப்பட்டிருக்கிறது என்பது கவலையளிக்கிறது.
ஆனால் எதிரிகள் பிரித்தாலும் கொள்கையை பக்காவாக பயன்படுத்தி எம் இதயங்களை கூறு போட்டு ஒற்றுமை எனும் பலத்தை சிதைத்து இருக்கின்றனர்.
ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் ஓர் உடலாக வர்ணித்தார்கள் நபி (ஸல்) அவர்கள். ஆனால் இன்று அந்த உடலை வைத்தே சமூகத் தலைமைகள், தத்தமது சுயநல உலகாதாயத்திற்காக கடித்துக் குதறி சின்னாபின்னமாக்கி விட்டிருக்கின்றனர். உள்வீட்டுச் சண்டைகளை காரணமாக கொண்டு பொது எதிரியை எதிர்கொள்வதிலும் வேறுபட்டு, சண்டையிட்டு, குரோதம் கொண்டு பிரிந்திருக்கிறோம்.
பலஸ்தீன பிரச்சினையில் சவூதிக்கும் துருக்கிக்கும் வக்காலத்து வாங்கும் சண்டையிலே எமது காலத்தை நாம் கழிக்கிறோம். அதே நேரம் அந்த நாட்டு தலைவர்களும் ஒரே அணியில் பொது எதிரியை எதிர்கொள்ளாமல் சகட்டுமேணிக்கு சில அரசியல், அதிகார வேறுபாடுகளை கொண்டு இரு துருவங்களாக வெறும் அறிக்கையில் தஞ்சம் அடைந்திருக்கிறார்களே தவிர ஆனது ஒன்றுமில்லை. இவ்விரண்டு சுன்னி முஸ்லிம் நாடுகளும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக எதிரியை எதிர்கொள்ளக் கூடாது என்பதில் எதிரி தெளிவாக இருக்கிறான். இதை முஸ்லிம் சமூகம் உணராமல் எதிரியின் எதிர்பார்ப்பிற்கு தோதுவாக கணகச்சிதமாக களப்பணி ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு பொய்யாகாது என்பதை மெய்ப்பித்திருப்பதைதான் இவைகள் எடுத்துக் காட்டுகின்றன. முஸ்லிம் சமூகம் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பார்கள் ஆனால் வெள்ளத்தில் அடிபட்ட சறுகுகள் போல் (ஒற்றுமை இழந்து) பலம் இழந்து இருப்பார்கள். அவர்களை நோக்கி எதிரிகள் பசித்த மிருகம் சாப்பாட்டுத் தட்டை நோக்கி பாய்ந்து வருவதை போல் வருவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்தார்கள். சமூகம் இதைதான் இன்று துல்லியமாக கண்டு கொண்டிருக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் சொன்ன மஹ்தி (அலை) அவர்களின் முன்னறிவிப்பை கொண்டே சமூகம் ஒற்றுமைப் படவிருக்கிறது. அந்த நேரத்தில் முஸ்லிம் சமூகம் முழுப்பலத்துடன் எதிரிகளை அடக்கி வெற்றிவாகை சூடும் என்பதில் சந்தேகம் இல்லை.
இன்ஷா அல்லாஹ்...