13 Apr 2017

ரஹீக் அல் மக்தூம்

 


ஓர் எழுத்தாளனின் மிகப் பொறுப்பு வாய்ந்த கடமைகளில் ஒன்றுதான், வாசகர்கள் அழுப்பு தட்டும் வண்ணம் தனது படைப்பு மிக நீளமானதாக இருக்கக் கூடாது; அதே நேரம் வாசகர்களுக்கு புரிந்து கொள்ள முடியாதவாறு மிகச் சுருக்கமானதாகவும் இருக்கக் கூடாது. "பாட்டி வடை சுட்டாள்" என்பதை பாட்டியையும் சட்டியையும் வர்ணித்தே எழுத்தை நீட்டக்கூடாது. தவிர, மிக முக்கிய கதாபாத்திரமாக இருந்தால் அதன் முக்கியத்துவத்திற்கு ஏற்ப அதன் வர்ணனையும், விளக்கமும் ஓரளவு விரிவுபடுத்தல் வேண்டும். ஆக மொத்தம் இரண்டிற்கும் மத்தியில் மத்திய தரம் பேணப்படல் அவசியம்.
அடுத்து மிக கவனிக்கவேண்டியது, வகைப்படுத்தல், வரிசை முறை, ஒழுங்குபடுத்தல். இதனை நன்கு சீர் செய்ய வேண்டும். ஐந்து வயது சிறுவனாக ஆறம்பித்து திடீரென்று அறுபது வயதிற்கு தாவி பிறகு "இருபது வயதில் காதல் வயப்பட்டான்" என்று வரிசைக் குழறுபடிகள் இருத்தல் கூடாது.
அடுத்து, தமது படைப்பு ஓர் ஆய்வு நிலை படைப்பாக இருந்தால், ஒவ்வொரு படினிலை விடயதானங்களுக்கும் ஆதரங்களையும், மேற்கோள்களையும் சமர்பிக்க வேண்டும். தனது வாசிப்பு அறிவிலும், தனது அனுபவத்திலும், சிந்தனையிலும் உதிர்ந்த கருத்துக்களை மேலெழுந்தவாரியாக அப்படியே எழுதிவிடுவது, ஆய்வு நிலை படைப்பிற்கு சற்றுமே உகந்ததல்ல.
இவ்வாறு ஓர் எழுத்தாளனின் பண்புகள், கடமைகள், பொறுப்புக்கள் என்பன நீட்சி பெறுகின்றன.
மேற்சொன்ன சில அடிப்படைகளை செவ்வனே பூர்த்தி செய்த ஓர் உன்னத படைப்பாக நாவீன காலத்தில் தொகுக்கப்பட்ட அகிலத்தின் அருட்கொடையான நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சுமந்து வரும் "ரஹீக் அல் மக்தூம்" ஓர் ஈடு இணை அற்றது எனலாம்.
ஆம்! எத்தனை தடவை வாசித்தாலும் அதன் சுவை மாறுவதே இல்லை. உள்ளே நுழைந்தால் வெளியேறுவதற்கு மனம் இடம் கொடுப்பதில்லை. கலங்கரை விளக்கான நபி (ஸல்) அவர்களின் ஒவ்வொரு படி நிலை வாழ்க்கை குறிப்புக்களையும் நேர்முக வர்ணணை செய்வது போல் மிக அற்புதமாக வரிசை கிரயமாக, ஆதாரப் பனுவல்களுடன் தொகுக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த அறிவுப் பொக்கிஷம் அது.
இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தில் பிறந்த இதன் ஆசிரியரான அறிஞர் ஸஃபிய்யுர் ரஹ்மான் முபாரக்பூரி (ரஹ்) அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!