19 Aug 2021

ஊடகப் பயங்கரவாதம்..

 

ஊடகப் பயங்கரவாதம் என்ற ஒரு சொல்லாட்சி இருக்கிறது. ஆனால் என்னைக் கேட்டால் பயங்கரவாதத்தின் உயிர்நாடியே ஊடகங்கள்தான் என்பேன். 
 
ஏகதிபத்திய தேசங்கள் மற்றும் சர்வதிகார அரசுகளின் கனவுகள், நலவுகள், எதிர்பார்ப்புக்கள் எல்லாம் இப்படியான ஊடகங்களினாலே சாத்தியப்படுகிறது.
 
ஒரு இரையான்மையுள்ள நாட்டை தன்னுடைய அரசியல், புவியியல், பொருளியல் நலவுகளுக்காக ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும் என்றால் அல்லது ஒரு நாட்டின் பெரும்பான்மை சமூகத்தை தங்களுடைய அரசிற்கு ஆதரவாக சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக தூண்டி விட வேண்டும் என்றால், அதற்கு தோதுவான ஒரு நாடகத்தை தயாரித்து ஒளிபரப்ப வேண்டும்.
 
 இதனை மிக நேர்த்தியாக நிறைவேற்றுகின்றன அதன் அடிமை ஊடகங்கள்.
மட்டுமல்லாமல் மக்களின் மனப்பாங்கை திசை திருப்புவதில் ஊடகங்களின் பங்கு உச்சபட்சம் எனலாம். 
 
தன்னுடைய எஜமானின் எதிரிக்கு எதிராக, எதிராளிகளை உற்பத்தி பன்னுவதில் ஊடகங்களின் வகிபங்கு மிக மோசமானது.
 
இத்தகைய சூழ்ச்சிகள் நிறைந்த ஊடக வலைப்பின்னல்களுக்கு மத்தியில், நடுநிலை ஊடகங்களும் ஆங்காங்கே செயற்படுகின்றன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் துரதிஷ்டம் அவைகள் பெரும்பாலும் மக்கள் மயப்படாத, வளங்கள் குறைந்த, மிகவும் அவல நிலையிலே காணப்படுகின்றன. 
 
விரும்பியோ விரும்பாமலோ ஊடகங்களினால் உள்ள உறவு இன்றியமையாததுதான். நாட்டு நடப்புக்கள், உலக விவகாரங்கள் போன்ற செய்திகளை தாங்கி நிற்பது ஊடகங்களே. 
 

ஆனால் நாம் விழித்துக் கொள்ள வேண்டும்; விடயதான விடயப்பரப்பை பொறுத்து, சமூகத்தின் தூரநோக்கை கருத்திற் கொண்டு, ஊடகங்களின் தன்மைகளை அறிந்து, வெளிவரும் செய்திகளின் ஆல அகலங்களை புரிந்து அதனை துறைசார் நல்ல அறிஞர்களிடம் ஒப்படைத்து விளக்கம் எடுத்துக் கொள்வதே புத்தி சாதூர்யமானது. மேலும் நாட்டு சூழலுக்கும், சமூககத்திற்கும் துரும்பிற்கும் பயன்படாத விடயங்களில் அவற்றை அலட்டிக் கொண்டு கருத்துச் சொல்ல முற்படுவதை விட அவற்றை மௌனமாக கடத்துவது, காலம் அவற்றின் முடிச்சுக்களை லாபகமாக அவிழ்த்து விடும்...

17 Aug 2021

மனித சிந்தனை..

சிந்திப்பது, கேள்வி கேட்பது, ஆராய்வது எல்லாம் மார்க்கம் வழியுறுத்திய சிறந்த நடைமுறைகள். ஆனால் எமது சிந்தனை ஆற்றளுக்கும் ஒரு எல்லைக் கோடு உண்டு. அந்த கோடுகள்தான் வஹீ எனும் இறைவனின் செய்திகள். 
 
அந்த எல்லைக் கோட்டைத் தாண்டி எமது சிந்தனைகளையும், கேள்விகளையும் நாம் விரிவு படுத்துவது எம்மை வழிகேட்டில் கொண்டு போய்ச் சேர்த்து விடும். 
 
'அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்தான்' என்றால் அதில் இரண்டு கருத்திற்கும், மாற்று கேள்விக்கும், வியாக்கியனப்படுத்துவதற்கும் இடமில்லை. 
 
உள்ளதை உள்ளது போன்று நம்பிக்கை கொள்வதே அஹ்லுஸ் ஸுன்னாக்களின் அகீதா. 
 
ஆனால் மாற்றுக் கொள்கை உடையோர் அதில் தங்களது சிந்தனையைப் பிரயோகித்து, கேள்விகளை அடுக்கி, 'அர்ஷின் மீது அமர்ந்தான்' என்றால், ஒன்றில் அர்ஷின் மீது அல்லாஹ்வுக்கு தேவை ஏற்படுவதாக இருக்கும் அல்லது அர்ஷ் அவனை விட சிறியதாகவோ பெரியதாகவோ இருக்கும். 
 
எனவே அதனுடைய விளக்கம் அல்லாஹ்வின் ஆட்சியைதான் குறிக்கும் என்று வஹீயை மீறிய சிந்தனையால் வழி தவறியுள்ளனர். 
 
அல்லாஹ்வின் சிருஷ்டிக்கும் ஆற்றலுடன் ஒப்பிடுகையில் எமது சிந்தனைகள் எல்லாம் தோற்றுப் போய் ஆச்சரிய விளிப்பில் போய் முடிந்து விடும். 
 
அந்தளவிற்கு நுண்ணறிவாளனும், பேறாற்றல் மிக்கவனுமாகிய, அந்த ரப்புல் ஆலமீனின் சொல் வாக்கை அப்படியே ஏற்று அதன் எல்லையில் இருந்து நம்பிக்கை கொள்வதுதான் ஒரு முஃமினின் பண்பாகும். 
 
மனிதனுக்கு சொற்பத்திலும் சொற்ப அறிவே வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்த வானம், பூமி, அண்ட சராசரங்களின் முடிச்சுக்களை அதன் படைப்பாளனைத் தவிர அவனுடைய படைப்பினங்களால் எப்படி அறிந்திட முடியும்?

 
சுபஹானல்லாஹ்!