12 Sept 2021

தனது செல்வம்...



இந்த உலகத்தில் எந்தவொரு மனிதனும் அவனுடைய செல்வம், தன்னை மரணமே வராமல் நிலையாக வைத்திருக்கும் என்று நினைப்பதில்லை. 

 கேட்டால் அப்படியில்லை என்றுதான் சொல்லுவான். 
 
மனிதனைப் படைத்து அவன் உள்ளங்களின் ஊசலாட்டத்தையும் அறியக் கூடிய ஏக இறைவனாகிய அல்லாஹ், செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று மனிதன் எண்ணுவதாக கூறுவதில் முரண்பாடு போல் தோன்றினாலும் அதில் எந்தவொரு முரண்பாடும் கிஞ்சித்தும் இல்லை. 
 
உண்மையில் மனிதன் தனது சொல்லால் அப்படிச் சொல்லாவிட்டாலும் செல்வம், தன்னை நிலையாக வைக்கும் என்பது போலத்தான் அவனுடைய உலக காரியங்கள் வியாபித்து இருக்கின்றன. 
 
இந்த உலகத்திலே நிரந்தரமாக வாழ வந்தவன் போல் செல்வத்தைக் கொண்டு பெருமை அடிக்கிறான்; தான தர்மங்களை விட்டும் பராமுகமாக இருக்கிறான்; தனது செல்வச் செறுக்கால் பலவீனமானவர்களை இழிவாகக் கருதுகிறான்; ஆடம்பரம், வீண் விரயங்களை கௌரவமாக கருதுகிறான்.
 
எந்த நேரத்திலும் மரணம் தன்னை நெருங்கும் என்ற சிந்தனை அற்று, அதற்கான மறுமை சேகரிப்பை புரக்கணித்து, செல்வச் செழிப்பில் உலகம் அவனை ஏமாற்றிக் கொண்டிருப்பதை அறியாமல் மூழ்கிக் கொண்டிருக்கிறான். 
 
இதே கருத்தைதான் அல்லாஹ் அவனது அருள் மறையில் இன்னோரிடத்தில் மிகத்தெளிவாக விபரித்து இவ்வாறு கூறி இருப்பதை அவதானிக்கலாம்.
 
وَ تَتَّخِذُوْنَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُوْنَ‌‏
 
 
பெரும் பெரும் மாளிகைகளை நிர்மாணிக்கின்றீர்கள் நீங்கள் என்றென்றும் வாழப் போவதைப்போல!
(அல்குர்ஆன் : 26:129)

 

No comments:

Post a Comment